ராஜ்யசபாவில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள்; கார்கேவுக்கு மத்திய அமைச்சர் பதில்!
ராஜ்யசபாவில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள்; கார்கேவுக்கு மத்திய அமைச்சர் பதில்!
ADDED : ஆக 05, 2025 02:04 PM

புதுடில்லி: ராஜ்யசபாவில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட அனுமதி அளித்ததுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே எதிர்ப்பு தெரிவித்தார்; அவருக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ பதில் அளித்துள்ளார்.
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொரின் முதல்நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் பார்லி முடங்கி வருகிறது. இன்று ராஜ்யசபா கூடியதும் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட அனுமதி அளித்ததுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு அவை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், ''அவையின் மாண்பை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் செயல்படுகின்றனர். பாதுகாப்பு கருதி ராஜ்யசபாவில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
இதற்கு, ''பார்லிமென்ட் உறுப்பினர்கள் பயங்கரவாதிகள் கிடையாது'' என கூறி காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜூன கார்கே தனது வாதத்தை முன் வைத்தார். தன் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அவை தலைவரிடம் கார் மனுவும் அளித்தார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது: எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்கள் ஜனநாயக உரிமையான போராட்டத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க ராஜ்யசபாவில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட பாஜ அரசு இன்று இறுதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.
நீங்கள் அவர்களை எந்தப் பெயரிலும் அழைக்கலாம், ஆனால் அவர்கள் அனைவரும் சி.ஐ.எஸ்.எப்., ஐச் சேர்ந்தவர்கள் என்பது உண்மைதான். இது பார்லிமென்டிற்கு அவமானம். ராஜ்யசபாவின் கட்டுப்பாட்டை மத்திய உள்துறை அமைச்சர் எடுத்துக் கொண்டாரா என்று இன்று ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டது சரிதான். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் பதிலடி
இது குறித்து மத்திய பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: ராஜ்யசபா துணைத் தலைவருக்குமல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார். விவாதங்களின் போது இது குறித்து குறிப்பிட்டபோது, நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அரசாங்கம் ராணுவம், காவல்துறை மற்றும் சி.ஐ.எஸ்.எப். பணியாளர்களைப் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
வெளி ராணுவம் அல்லது காவல் படை எதுவும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படவில்லை என்று அவைத் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். எதிர்க்கட்சிகள் ஊடகங்கள் மூலம் பொய்களைப் பரப்பின. நாட்டை தவறாக வழிநடத்த முயன்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.