100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு...மிரட்டல்!
100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு...மிரட்டல்!
ADDED : மே 02, 2024 01:28 AM

தலைநகர் டில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நொய்டா, காஜியாபாத் மற்றும் குருகிராம்நகரங்களில் உள்ள நுாற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு, ஒரே நேரத்தில், 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர், பீதியும் பதற்றமும் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டில்லி நகரம் மற்றும் அதைச் சுற்றி உள்ள உபி.,யைச் சேர்ந்த நொய்டா, காஜியாபாத் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த குருகிராம் ஆகிய நகரங்கள் அனைத்தும் சேர்த்து, என்சிஆர் எனப்படும், தேசிய தலைநகர் பகுதி என அழைக்கப்படுகிறது.
இங்குள்ள சில பள்ளிகள், நேற்று காலை திறக்கப்பட்டதுமே, பரபரப்பு பற்றிக் கொண்டது. பள்ளியில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு சில நிமிடங்களில் வெடிக்க உள்ளதாக அந்த இ - மெயிலில் குறிப்படப்பட்டு இருந்தது. மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பள்ளி பேருந்துகள், தனியார் வாகனங்கள் வாயிலாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வந்தனர்.
பள்ளி வளாகங்கள் முழுதும் சோதனையிடப்பட்டது. இந்த பதற்றம் சிறிது சிறிதாக மற்ற பகுதிகளுக்கும் பரவத் துவங்கியது. அப்போது தான், ஒரே நேரத்தில் இதே இ - மெயில், டில்லி, நொய்டா, காஜியாபாத், குருகிராம் நகரங்களில் உள்ள நுாற்றுக்கும் அதிகமான பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள விபரம் தெரியவந்தது.
இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதும், பள்ளிகள் முன்பாக பெற்றோர் திரண்டனர். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பள்ளி வளாகங்களில், பெரும் கூட்டம் கூடத் துவங்கியதும் குழப்பம் அதிகரித்தது.
போலீசாரின் சோதனைகள் ஒருபுறம் தீவிரமாக நடக்க, டில்லி லெப்டினன்ட் கவர்னர் சக்சேனா, நேரடியாக களத்தில் இறங்கினார். பல பள்ளிகளுக்கு நேரடியாக சென்றார்.
சோதனை செய்யப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டுகள் இல்லை என்ற தகவல் வரத் துவங்கியது. ஆனாலும், பெற்றோர்கள் - பொதுமக்கள் மத்தியில் பீதி குறையவில்லை.
இதனால், வேறுவழியின்றி, சட்டம் - ஒழுங்கை கையில் வைத்துள்ள, மத்திய உள்துறை அமைச்சகமே, ஒரு அறிப்பை வெளியிட்டது. அதில், 'வெடிகுண்டு மிரட்டல் போலியானது. யாரும் அச்சப்படத் தேவையில்லை' என, தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், திடீரென ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை சமாளிப்பதற்கு, டில்லி போலீஸ் தலைமையகத்தில் உயர் அதிகாரிகள், சமூக வலைதள நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
பின்னர், நிருபர்களிடம் டில்லி போலீசின் செய்தித் தொடர்பாளர் சுமன் நல்வா கூறுகையில், ''சோதனையில் சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. வேண்டுமென்றே பீதியை கிளப்ப யாரோ சதி செய்துள்ளனர். பெற்றோர்கள் பீதி அடைய வேண்டாம்,'' என்றார்.
இது தொடர்பாக, டில்லி பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். 'தேச பாதுகாப்பு தொடர்பான பிரச்னை என்பதால், இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்' என, டில்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ddd
d
d
d
-நமது டில்லி நிருபர்-

