ஏ.ஐ., மூலம் இயங்கக்கூடிய 'ட்ரோன்' எதிர்ப்பு வாகனம் அறிமுகம்
ஏ.ஐ., மூலம் இயங்கக்கூடிய 'ட்ரோன்' எதிர்ப்பு வாகனம் அறிமுகம்
ADDED : நவ 26, 2025 11:57 PM

புதுடில்லி: எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக்கூடிய, நாட்டின் முதல், 'இந்திரஜால் ரேஞ்சர்' என்ற, 'ட்ரோன்' எதிர்ப்பு ரோந்து வாகனத்தை, 'இந்திரஜால் ட்ரோன் டிபென்ஸ்' நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
இதில் ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் எல்லை வழியாக, பாகிஸ்தானில் இருந்து, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் ஆயுதங்கள், போதைப் பொருள் கடத்துவது அதிகரித்து வருகிறது.
சட்ட விரோதமாக நுழையும் ட்ரோன்களை கண்டறிந்து, நம் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், நாட்டின் முதல் ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனத்தை, இந்திரஜால் ட்ரோன் டிபென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஏ.ஐ., மூலம் இயங்கக்கூடிய இந்த வாகனத்துக்கு, இந்திரஜால் ரேஞ்சர் என பெயரிடப்பட்டு உள்ளது.
வழக்கமாக, ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு ஓரிடத்தில் நிலையாக இருக்கும். ஆனால் இந்த ரேஞ்சர் வாகனம், அனைத்து இடங்களிலும் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
எல்லை தாண்டிய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்திரஜால் ரேஞ்சர் வாகனத்தின் வரவு, நம் படைகளுக்கு பக்க பலமாக இருக்கும்.
வாகனம் இயங்கும் போதே எதிரிகளின் ட்ரோன்களைக் கண்டறிந்து, கண்காணித்து, அவற்றை அழிக்கும் திறன் உள்ளது. இதில் உள்ள ஏ.ஐ., தொழில்நுட்பம் தன்னிச்சையாக அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு, இலக்குகளை உடனடியாக இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது.
இந்திரஜால் வரவால், எல்லையில் ட்ரோன் மூலம் நடக்கும் கடத்தல் சம்பவங்கள் குறையும் என்றும், எல்லையோர மக்களுக்கு அமைதியான சூழல் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு ஓரிடத்தில் நிலையாக இருக்கும் நிலையில், இந்திரஜால் வாகனம் நடமாடும் வகையில் வடிவமைப்பு அனைத்து நிலப்பரப்புகளிலும் இயங்கும் ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் இயங்கக்கூடியது என்பதால், எதிரிகளின் ட்ரோன்களை உடனடியாக கண்டறிந்து இடைமறித்து தாக்கும் இதன் பிரத்யேக, 'ஸ்கை ஓ.எஸ்.,' தொழில்நுட்பம், பல சென்சார்களின் தரவுகளை ஒருங்கிணைத்து, நிகழ்நேர முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டது

