அடுத்த சர்ச்சையில் சிக்கியது காங்கிரஸ் வாய் கொழுப்பு! பாக்.,கை மதிக்க மணிசங்கர் 'அட்வைஸ்'
அடுத்த சர்ச்சையில் சிக்கியது காங்கிரஸ் வாய் கொழுப்பு! பாக்.,கை மதிக்க மணிசங்கர் 'அட்வைஸ்'
ADDED : மே 11, 2024 12:53 AM

'பாகிஸ்தானுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுடன் முறையாக பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அவர்களிடமும் அணுகுண்டு உள்ளது. நாம் அவர்களை மதிக்கவில்லை எனில், அந்த அணுகுண்டை அவர்கள் நம் மீது பயன்படுத்தினால், அதற்கு நாம் பெரிய விலை கொடுக்க நேரிடும்' என, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசியுள்ள பழைய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது காங்., தலைவர்களுக்கு வழக்கமாகி வருகிறது.
பரம்பரை சொத்து வரி, நிற வெறியை துாண்டும் கருத்து உள்ளிட்ட பேச்சுக்களால், காங்., வெளிநாட்டுப் பிரிவு தலைவராக இருந்த சாம் பிட்ரோடா சமீபத்தில் பதவியை இழந்தார்.
இந்த வரிசையில், தமிழகத்தைச் சேர்ந்த காங்., மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் புது வரவாக இணைந்துள்ளார்.
இவர், வீடியோ ஊடகம் ஒன்றுக்கு கடந்த மாதம் 15ல் அளித்த பேட்டி ஒன்று, சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
வாய்ப்பு
அந்த பேட்டியில் மணிசங்கர் அய்யர் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் என்பது இறையாண்மை கொண்ட நாடு; மிகவும் மதிக்கத்தக்க நாடும்கூட. அவர்களுடன் நமக்குள்ள பிரச்னைக்கு, பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும். அதை விடுத்து, நம் ராணுவ பலத்தை பிரயோகிப்பது பலன் அளிக்காது.
பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவர்களிடமும் அணுகுண்டு உள்ளது. நாம் அவர்களை மதிக்கவில்லை எனில், அதை நம் மீது ஏவ வாய்ப்புள்ளது.
ஒரு மோசமான நபர் அங்கு பொறுப்புக்கு வந்துவிட்டால், நம் நாட்டிற்கு என்ன வேண்டுமானாலும் நடக்கும்.
நம்மிடமும் அணுகுண்டு இருக்கிறது. நம் அணுகுண்டு லாகூரில் வெடித்தால், அதன் கதிர்வீச்சு பாதிப்பு, நம் பஞ்சாபின் அமிர்தசரசை வந்தடைய 8 வினாடிகள் போதும்.
எனவே, அணுகுண்டு பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். அதேசமயம், பேச்சை துவக்கி அவர்களையும் ஊக்கப்படுத்தினால், அணுகுண்டு பற்றியெல்லாம் அவர்களும் சிந்திக்க மாட்டார்கள்.
நாம் உலகத்திற்கே வழிகாட்டும் விஸ்வகுருவாக ஆசைப்படலாம். அதேசமயம், ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். விஸ்வகுருவாக நினைத்தால், அருகில் உள்ள பாகிஸ்தான் உடனான இருதரப்பு நல்லுறவை மேம்படுத்த வேண்டும்.
அந்நாட்டுடன் நிலவும் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு காண வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு, பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்த, எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏற்புடையது அல்ல
மணிசங்கர் அய்யரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதையடுத்து, மணிசங்கரின் பேச்சுக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டுள்ளது. இது குறித்து, அக்கட்சியின் மூத்த தலைவரும், ஊடகப் பிரிவு தலைவருமான பவன் கெரா கூறியதாவது:
மணிசங்கரின் பழைய பேச்சை பா.ஜ., இப்போது கிளறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தினந்தோறும் பிரசாரத்தில் சொல்லி வரும் பொய்களை திசை திருப்பவே, பா.ஜ., இது போன்ற செயல்களை செய்கிறது.
மணிசங்கரின் பேச்சு ஏற்புடையது அல்ல. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடும் அதுவல்ல. அவர், கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. எனவே, கட்சி சார்பில் பேசிய அதிகாரப்பூர்வ பேச்சாக அதை கருதக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -