தெளிய வெச்சு அடிக்கும் தொற்று நோய்கள்; இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு: குரங்கு அம்மையால் உலகம் முழுவதும் அதிர்ச்சி
தெளிய வெச்சு அடிக்கும் தொற்று நோய்கள்; இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு: குரங்கு அம்மையால் உலகம் முழுவதும் அதிர்ச்சி
UPDATED : ஆக 16, 2024 01:09 PM
ADDED : ஆக 16, 2024 07:13 AM

ஸ்டாக்ஹோம்: முதன்முறையாக, ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டதால், உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இந்த நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022 முதல் பரவத் துவங்கிய இந்த நோயானது முதலில் ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது.
அவசர நிலை
ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 517 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளிடையே குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்தது.
ஸ்வீடனில் ஒருவருக்கு உறுதி!
இந்நிலையில், தற்போதைய பரவலில், ஆப்பிரிக்கா கண்டத்துக்கு வெளியே முதன்முறையாக, ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
'ஸ்வீடனில் ஒரு நபருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று இருப்பதை நேற்று பிற்பகல் உறுதிபடுத்தினோம். சமீபத்தில் ஆப்ரிக்காவிற்கு பாதிக்கப்பட்ட நபர் சென்றுள்ளார். அப்போது தான் அவருக்கு குரங்கு அம்மை தொற்று பரவியுள்ளது' என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஜாகோப் போர்ஸ்மெட் தெரிவித்தார்.
தடுப்பூசி
ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும், 'இமான்வேக்ஸ்' தடுப்பூசி பெரியம்மை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதே தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கும் பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்திருந்தது.