இன்று 'மூடா' வழக்கு விசாரணை: முதல்வர் பயணத்தில் திடீர் மாற்றம்
இன்று 'மூடா' வழக்கு விசாரணை: முதல்வர் பயணத்தில் திடீர் மாற்றம்
ADDED : செப் 01, 2024 11:24 PM
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா, மைசூரு சுற்றுப்பயணம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'மூடா' தொடர்பான விசாரணை இன்று நடப்பதே, இதற்கு காரணமாகும்.
முதல்வர் சித்தராமையா, இன்று காலை மைசூரின் சாமுண்டி மலைக்கு சென்று சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். 'மூடா' முறைகேடு தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஆகஸ்ட் 19 மற்றும் 31ல் நடந்த விசாரணை, இன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை நிகழ்வுகளை, தன் வீட்டில் இருந்து கவனிப்பார். விசாரணை முடிந்த பின், இன்று மாலை மைசூரு புறப்படுவார். இரவு மைசூரிலேயே தங்குவார். நாளை காலை சாமுண்டி மலைக்கு சென்று, சாமுண்டீஸ்வரியை தரிசிப்பார். செப்டம்பர் 4ல் சாமுண்டி மேம்பாட்டு ஆணைய கூட்டத்தில் பங்கேற்பார். அதன்பின் பெங்களூரு திரும்புவார்.
சாமுண்டி மலையை மேம்படுத்தும் நோக்கில், அரசு ஆணையம் அமைத்ததற்கு, அரச குடும்பத்தினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினர். நீதிமன்றமும் தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என, அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அப்படி இருந்தும், சாமுண்டி மேம்பாட்டு ஆணையத்துடன், முதல்வர் சித்தராமையா ஆலோசனை கூட்டம் நடத்த முற்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சாமுண்டி மேம்பாட்டு ஆணையத்தில், இதற்கு முன் அரச குடும்பத்தினரும் இடம் பெற்றிருந்தனர். இப்போது இவர்களை விலக்கி வைத்து விட்டு அமைச்சர்களும், அதிகாரிகளும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இது அரச குடும்பத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாமுண்டீஸ்வரி கோவிலை முழுமையாக, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அரசு முயற்சிப்பதை கண்டித்துள்ளனர்.
சமீபத்தில் அரச குடும்பத்தின் ராணி பிரமோதா தேவி, 'சாமுண்டீஸ்வரி கோவில் எங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து. இதை நாங்கள் விட்டுத் தரமாட்டோம்' என திட்டவட்டமாக கூறியிருந்தார்.