ADDED : ஜூலை 11, 2024 04:24 AM

அபநாசினியின் துணை ஆற்றில் பாயும் முக்திஹொளே நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.
கர்நாடகாவில் நான்கைந்து மாதங்களாக பெரும்பாலான நீர்வீழ்ச்சிகள் வறண்டிருந்தன. தற்போது பரவலாக மழை பெய்வதால், நீர் வீழ்ச்சிகள் களைகட்டியுள்ளன. இவற்றில் முக்திஹொளே நீர்வீழ்ச்சியும் ஒன்று.
அபூர்வ நீர்வீழ்ச்சி
உத்தரகன்னடாவின் முக்திஹொளே மிகவும் அபூர்வமான நீர் வீழ்ச்சியாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடர்த்தியான வனப்பகுதியில் அமைந்துள்ளது. அபநாசினி ஆற்றின் துணை ஆறு, இந்த அழகான நீர்வீழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்த துணை ஆற்றின் முக்திஹொளே நீர்வீழ்ச்சியின் கீழே எட்டு கி.மீ., பாய்ந்து சென்று குன்டபாளா ஆற்றில் கலந்து, அதன்பின் அரபிக்கடலில் சேர்கிறது.
முக்திஹொளே ஐந்தாக பிரிந்து, மேலிருந்து பூமியை நோக்கி அசுர வேகத்தில் பாயும் அழகை காண, இரண்டு கண்கள் போதாது. இந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்வது மிகவும் கடினமாகும்.
ஏன் என்றால் ஐந்து முதல் ஆறு கி.மீ., துாரம் அடர்த்தியான வனப்பகுதியில், ஆற்றிலேயே நடந்து செல்ல வேண்டும். இது மறக்க முடியாத, திரில்லிங்கான அனுபவத்தை அளிக்கும். இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
டிரெக்கிங்
டிரெக்கிங் செய்ய தகுந்த இடமாகும். இங்கு மொபைல் போன் நெட்ஒர்க் கிடைக்காத பகுதி என்பதால், அப்பகுதியினரிடம் தகவல் தெரிந்து கொண்டு, டிரெக்கிங் செல்வது நல்லது. உள்ளூரில் வசிப்பவரை உடன் அழைத்துச் செல்லலாம்.
முக்திஹொளேவுக்குச் செல்ல விரும்பும் சுற்றுலா பயணியர்.
ஹொன்னாவரா அல்லது குமட்டா வழியாக வரலாம். வாகனத்தில் வருவோர் குன்டபாளா அல்லது அரே அங்கடி வழியாக பயணித்து, ஹிரேபைல் பஸ் நிலையம் அருகில் வாகனத்தை நிறுத்த வேண்டும். இங்கிருந்து நடந்து செல்ல வேண்டும்.
குன்டிபைல் - ஹரடசே பாதையில் பயணித்தால், கட்கல் பாலம் அருகில் வாகனத்தை நிறுத்தி, நடந்து சென்றால் முக்திஹொளே நீர்வீழ்ச்சியை அடையலாம்.

