பள்ளி கட்டடத்திற்கு தகுதி சான்று வழங்க ரூ.ஒரு லட்சம் லஞ்சம் நகராட்சி உதவி பொறியாளர், ஏஜன்ட் கைது
பள்ளி கட்டடத்திற்கு தகுதி சான்று வழங்க ரூ.ஒரு லட்சம் லஞ்சம் நகராட்சி உதவி பொறியாளர், ஏஜன்ட் கைது
ADDED : ஜூன் 27, 2024 02:21 AM

மூணாறு:கேரளாவில் பள்ளி கட்டடத்திற்கு தகுதிச்சான்று வழங்க ரூ.ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய நகராட்சி உதவி பொறியாளர், ஏஜன்ட் கைது செய்யப்பட்டனர்.
கேரளா இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கும்மம்கல்லு பகுதியில் உள்ள தனியார் ஆரம்ப பள்ளியில் புதிய கட்டடத்திற்கு தகுதி சான்று கோரி தொடுபுழா நகராட்சியில் பள்ளி நிர்வாகம் ஒரு மாதத்திற்கு முன் விண்ணப்பித்தது.
இதுதொடர்பாக பள்ளி மேலாளர் நேற்று முன்தினம் அந்நகராட்சி உதவி பொறியாளர் அஜியை 56, தொடர்பு கொண்டபோது தகுதி சான்று வழங்க ரூ. ஒரு லட்சம் லஞ்சம் கேட்டார்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கிழக்கு மண்டல கண்காணிப்பாளர் பிஜோஅலெக்ஸ்சாண்டரிடம் தெரிவித்தனர்.
அவரது அறிவுறுத்தலின்படி பள்ளி நிர்வாகம் தரப்பில் நகராட்சி அலுவலகத்தில் வைத்து அஜியிடம் ரூ.ஒரு லட்சம் கொடுக்கப்பட்டது.
அப்போது தொடுபுழா டி.எஸ்.பி.ஷாஜூஜோசப் தலைமையில் அதிகாரிகள் அஜி மற்றும் லஞ்சம் பெற ஏஜன்ட் ஆக செயல்பட்ட முதலகோட்டத்தைச் சேர்ந்த ரோஷன் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் நகராட்சி தலைவர் சனிஷ்ஜார்ஜ் கூறியபடி லஞ்சம் கேட்டதாக தெரியவந்ததால் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உதவி பொறியாளர் அஜி இரண்டு மாதங்களில் பணி ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.