பி.சி., பட்டியலில் முஸ்லிம்கள்? தெலுங்கானா அரசுக்கு கண்டனம்
பி.சி., பட்டியலில் முஸ்லிம்கள்? தெலுங்கானா அரசுக்கு கண்டனம்
ADDED : பிப் 10, 2025 05:08 AM

ஹைதராபாத் : ''தெலுங்கானா மாநிலத்தில் நடக்கும் ஜாதி வாரி கணக்கெடுப்பில், பி.சி., எனப்படும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களை சேர்ப்பது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு செய்யப்படும் அநீதி,'' என, மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., அரசு நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் நடத்திய ஜாதி வாரி கணக்கெடுப்பு பட்டியலை காங்., அரசுசமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களை சேர்ப்பது தொடர்பாக, அம்மாநில பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் ஆலோசனை நடத்தினார். மாநில அரசின் இந்த முடிவுக்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பண்டி சஞ்சய் குமார் கூறியதாவது: பி.சி., பிரிவுக்குள் முஸ்லிம்களை சேர்ப்பது, மற்ற பிற்பட்ட சாதியினருக்கு இழைக்கப்படும் அநீதி. முந்தைய பி.ஆர்.எஸ்., அரசு எடுத்த கணக்கெடுப்பில் 51 சதவீதமாக இருந்த பி.சி., எண்ணிக்கை, தற்போது காங்., அரசில் குறைந்தது எப்படி?
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்தபோது, முஸ்லிம்களை பி.சி.,யாக அங்கீகரித்து உள்ளாட்சி தேர்தலில் 4 சதவீத ஒதுக்கீட்டை அப்போதைய முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வழங்கியதால், ஹைதராபாதில் ஒரு ஹிந்து வேட்பாளர் கூட வெற்றி பெற முடியவில்லை.
பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களை சேர்ப்பதை, அந்த பிரிவில் இருக்கும் மற்ற ஜாதியினர் ஏற்றுக் கொள்வதில்லை என்பதை, காங்கிரஸ் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

