மைசூரு மண்டல கே.எஸ்.ஆர்.டி.சி., இணைப்பு பஸ்கள் விரைவில் இயக்கம்
மைசூரு மண்டல கே.எஸ்.ஆர்.டி.சி., இணைப்பு பஸ்கள் விரைவில் இயக்கம்
ADDED : மே 11, 2024 06:57 AM

மைசூரு: மைசூரில் சிட்டி பஸ் நிலையம், புறநகர் பஸ் நிலையம், ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், இணைப்பு பஸ்களை இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., மைசூரு மண்டலம் ஆலோசித்து வருகிறது.
இதுதொடர்பாக நேற்று கே.எஸ்.ஆர்.டி.சி., மைசூரு மண்டல போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி வீரேஷ் கூறியதாவது:
பயணியர் வசதிக்காக இணைப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக புறநகர் பஸ் நிலையம், நகர பஸ் நிலையம், ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படும்.
பயணியரிடம் கிடைக்கும் ஆதரவை பொறுத்து, கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
முதல்கட்டமாக, மைசூரு நகர பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு டபுள் ரோடு, ராமசாமி சதுக்கம், ஜே.எல்.பி., சாலை, பீல்டு மார்ஷல் கே.எம்.கிரயப்பா சதுக்கம் (மெட்ரோ போல் சதுக்கம்), தாசப்பா சதுக்கம், சிட்டி ரயில் நிலையம், இர்வின் சாலை, கே.ஆர்., மருத்துவமனை, துணை புறநகர் பஸ் நிலையம், நசர்பாத் பி.எஸ்.என்.எல்., அலுவலகம், ஹர்டிகே சதுக்கம் வழியாக மீண்டும் நகர பஸ் நிலையத்துக்கு வந்தடையும்.
மற்றொரு வழித்தடம் பஸ், நகர பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மைசூரு மாநகராட்சி அலுவலகம், ஹர்டிகே சதுக்கம், அரண்மனை தெற்கு நுழைவு வாயில், துணை புறநகர் பஸ் நிலையம், இர்வின் சாலை, கே.ஆர்., மருத்துவமனை, சிட்டி ரயில் நிலையம், தாசப்பா சதுக்கம், ராமசாமி சதுக்கம், டபுள் சாலை, சான்ஸ்கிரிட் பாடசாலை வழியாக நகர பஸ் நிலையம் வந்தடையும்.
100 மின்சார பஸ்கள்
'பிரதமர் இ - பஸ் சேவை' திட்டத்தின் கீழ், ஐந்து முதல் 10 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு 100 மின்சார பஸ்கள் ஒதுக்கப்படும்.
இந்த வகையில், மைசூரு, பெலகாவி, கலபுரகி, ஹூப்பள்ளி - தார்வாட், மங்களூருக்கு விரைவில் தலா 100 மின்சார பஸ்கள் கிடைக்க உள்ளன.
ஐந்து லட்சத்துக்கு குறைவான மக்கள் தொகை உள்ள பல்லாரி, விஜயபுரா, தாவணகெரே, ஷிவமொகா, துமகூரு நகரங்களுக்கு தலா 50 மின்சார பஸ்கள் கிடைக்கும்.
இந்த பஸ்கள் கிடைத்தவுடன், மைசூரு நகர பஸ் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு பகுதிக்கும் மின்சார பஸ்கள் இயக்கப்படும். உதாரணமாக ஜே.பி., நகரில் இருந்து ஹெப்பால்; சித்தார்த்தா லே - அவுட்டில் இருந்து விஜயநகரா; ஜே.பி., நகரில் இருந்து சித்தார்த்தா லே - அவுட் வழித்தடங்களில் இயக்கப்படும்.
தற்போது மைசூரு நகருக்கு உட்பட்ட பகுதியில் 492 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 118 பஸ்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. விரைவில் 100 மின்சார பஸ்கள் இணைக்கப்படும். கூடுதலாக மாநில அரசின் திட்டத்தின் கீழ், '50 புதிய 'அடர் நீல' நிற பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும்.
அதேவேளையில், சாமுண்டி மலை, இன்போசிஸ், ஹெப்பால் வழித்தடங்களில் இயக்கப்படும் 22 வோல்வோ பஸ்கள் நல்ல நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர்கூறினார்.