கோல்கட்டாவில் வெடித்து சிதறிய மர்ம பொருள்; மக்கள் அச்சம்
கோல்கட்டாவில் வெடித்து சிதறிய மர்ம பொருள்; மக்கள் அச்சம்
ADDED : செப் 15, 2024 12:26 AM

கோல்கட்டா: மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் ஜூனியர் டாக்டர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதான சாலையில் மர்ம பொருள் நேற்று திடீரென வெடித்து சிதறியது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டர் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில், கோல்கட்டாவில் உள்ள எஸ்.என்.பானர்ஜி சாலை சந்திப்பில் நேற்று பிற்பகல் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்தது.
அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போது, 58 வயதான நபர் படுகாயங்களுடன் இருந்தார். உடனே, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
வெடி விபத்து நிகழ்ந்த பகுதியில் வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காயமடைந்த நபர் பாபி தாஸ் எனவும், குப்பை அள்ளும் தொழிலாளி எனவும் தெரியவந்தது.
அந்தச் சாலையின் நடைபாதையில், கீழே கிடந்த பிளாஸ்டிக் பை சுற்றப்பட்ட மர்மப் பொருளை அவர் எடுத்தபோது, எதிர்பாராதவிதமாக அப்பொருள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த வெடிவிபத்து குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என பா.ஜ., தலைவரும், மத்திய அமைச்சருமான சுகந்தா மஜும்தார் வலியுறுத்தி உள்ளார்.