ADDED : மார் 11, 2025 06:25 AM

பெலகாவி: ''எம்.இ.எஸ்., அமைப்பை தடை செய்யாவிட்டால், அடுத்த முறை சுவர்ண விதான் சவுதாவில் சட்டசபை கூட்டத்தொடர் நடத்த விட மாட்டோம்,'' என, வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.
பெலகாவி, ராணி சென்னம்மா சதுக்கத்தில், நேற்று கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மராத்தியர்களை கர்நாடகாவில் இருந்து வெளியேற்ற வேண்டும். கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நடத்துனரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெலகாவியில் பிரச்னைகளை கிளப்புவோர் தண்டிக்கப்பட வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வாட்டாள் நாகராஜ் பேசியதாவது:
பெலகாவியில் நடப்பது குறித்து, மாநில அரசிற்கு எதுவும் தெரிவதில்லை. மராத்தியர்களின் எம்.இ.எஸ்., அமைப்புக்கு தடை செய்ய வேண்டும். இல்லையெனில், அடுத்த முறை சுவர்ண விதான் சவுதாவில் சட்டசபை கூட்டத்தொடர் நடத்த விட மாட்டோம்.
ஒவ்வொரு மாதமும் மூன்று அமைச்சர்கள், சுவர்ண விதான சவுதாவிற்கு வந்து, பெலகாவியில் உள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மகதாயி, மேகதாது திட்டங்களை நிறைவேற்றுமாறு வரும் 22ம் தேதி கர்நாடக, 'பந்த்'துக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.