நம்ம கர்நாடகாவில் மண்பாண்ட கலை கல்வி வழங்கும் ஒரே பயிற்சி மையம்
நம்ம கர்நாடகாவில் மண்பாண்ட கலை கல்வி வழங்கும் ஒரே பயிற்சி மையம்
ADDED : செப் 08, 2024 07:04 AM

கிராமப்புற குடிசை தொழிலாக இருந்த மண்பாண்டங்கள் செய்யும் கலை, நவீன உலகில் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.
ஆனால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிலேயே மண்பாண்ட கலையை கல்வியாக பயிற்றுவித்து வரும் ஒரே நிறுவனம், பெலகாவி மாவட்டம், கானாபுரத்தில் உள்ள மத்திய கிராம கும்பரிகா பயிற்சி நிறுவனம்.
இந்த பயிற்சி மையம், 1954ல் கானாபூரின் புறநகர் பகுதியில் மலபிரபா ஆற்றங்கரையில், மூன்றரை ஏக்கரில் துவங்கப்பட்டது.
இதன் பின், கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், கோவா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, பீஹார், உத்தர பிரதேசம், ஹிமாச்சலப்பிரதேசம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் இளைஞர்கள், பெண்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று, கைவினைஞர்களாக மாறியுள்ளனர்.
இந்த பயிற்சியை படிக்காதவர்கள் மட்டுமின்றி, படித்தவர்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பலர் சுய தொழில் செய்பவர்களாகவும், தொழில் முனைவோராகவும் உள்ளனர்.
மண்பாண்ட தொழிலுக்கு நவீன 'டச்' கொடுத்துள்ளனர். இந்நிறுவனம், நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பும் வழங்கி உள்ளது.
16 வயது முதல்
இங்கு பயிற்சி பெற விரும்புவோர்,16 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இங்கேயே தங்கி பயிற்சி பெறும் வசதிகள் உள்ளன. 40 பேர் வரை தங்கி பயிற்சி பெறலாம். இலவச உணவு, தங்கும் விடுதி வசதியுடன் ஒவ்வொரு மாதமும் 1,500 முதல் 3,000 ரூபாய் வரை கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
பல்வேறு வகையான வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள், சிலைகள், பொம்மைகள், பூஜை உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இங்கு 50 லிட்டர் குடிநீர் ஹீட்டர், குடிநீர் குடம், உணவு தயாரிக்கும் பாத்திரம், பணப்பெட்டி, தட்டு, அலங்கார குடம், தொங்கும் சங்கிலி, பூங்தொட்டி, அடுப்பு, பானை, களிமண் பாட்டில்கள், காது, கழுத்தில் போட ஆபரணங்களை எப்படி செய்வது, குப்பை தொட்டி போன்றவற்றை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
இலவச தங்கும் வசதி
ஆணைய மூத்த செயல் அதிகாரி சேஷோ நாராயண் தேஷ்பாண்டே கூறியதாவது:
நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பயிற்சி பெற்று, பல கலை படைப்புகளை உருவாக்க, களிமண்ணில் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம்.
கலைப்படைப்புகளை கை அல்லது இயந்திரம் மூலம் செய்யலாம். மாணவர்களுக்கு இலவச உணவு, தங்கும் வசதி உள்ளது. ஆனால் மாணவியருக்கு இலவச உணவு மட்டுமே வழங்கப்படும்; தங்கும் வசதி இல்லை. எனவே, அவர்கள் வெளியே தனியாக அறையோ அல்லது வீடோ எடுத்து தங்கிக் கொள்ளலாம்.
மத்திய அரசின் மண்பாண்ட அதிகாரம் அளிக்கும் திட்டத்தின் கீழ், இயந்திர சக்கரங்களும் வினியோகிக்கப்படுகின்றன. குடிசை தொழில் தொடர்பாக 'ஸ்டார்அப்' நிறுவனங்களுக்கும் அரசு கடனுதவி அளித்து வருகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மண்பாண்டங்கள் செய்யும் பயிற்சிக்கூடம். (2வது, 3வது படங்கள்) பயிற்சியின்போது மாணவர்கள் உருவாக்கிய விதவிதமான மண்பாண்டங்கள். (கடைசி படம்) விநாயகர் சிலை உருவாக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்கள்.
மண்பாண்டங்கள் செய்யும் பயிற்சிக்கூடம்.
ஜோதி, பெங்களூரு.
விஜயாகிரி, தெலுங்கானா
நான், களிமண் பொருட்களை கையில் செய்து வருகிறேன். இயந்திரங்களில் இருந்து கற்றுக்கொள்ளவே இங்கு வந்தேன். ஆசிரியர் மிக நன்றாக கற்பிக்கிறார். அவர் திருப்தியடையும் வகையில் கற்பிக்கிறார். களிமண்ணில் என்னென்ன கலைப் படைப்புகளை உருவாக்கலாம் என்று பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஜோதி, பெங்களூரு.
எனது முன்னோர் மண்பாண்டங்கள் செய்து வந்தனர். நானும் கற்றுக்கொள்ள விரும்பினேன். பெலகாவியில் பயிற்சி நிறுவனம் இருப்பதாக தெரிந்தது. அதனால் தெலுங்கானாவில் இருந்து இங்கு வந்து, 20 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இங்குள்ளவர்கள், சிறப்பாக பயிற்சி அளிக்கின்றனர்.
விஜயாகிரி, தெலுங்கானா
பயிற்சியின்போது மாணவர்கள் உருவாக்கிய விதவிதமான மண்பாண்டங்கள்.
- நமது நிருபர் -