நந்தினி பால் விலை உயர்வு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
நந்தினி பால் விலை உயர்வு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
ADDED : பிப் 23, 2025 07:00 AM
பல்லாரி: “நந்தினி பால் விலை உயர்த்தப்படும் என வதந்திகள் வெளியாகிய நிலையில், அரசு தரப்பில் எவ்வித முடிவும் எடுக்கவில்லை,” என கே.எம்.எப்., தலைவர் பீமா நாயக் கூறி உள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பஸ், மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இந்நிலையில், பட்ஜெட்டில் நந்தினி பால் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும் என வதந்திகள் பரவின. இதனால், பொது மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இது குறித்து பல்லாரியில் கே.எம்.எப்., எனும் கர்நாடக மில்க் பெடரேஷன் அமைப்பு தலைவர் பீமா நாயக் கூறியதாவது:
கடந்த மாதம், கால் நடை பராமரிப்பு துறை அமைச்சருடன், கே.எம்.எப்., அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், பால் தொழிற்சங்க நிர்வாகிகள், பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். பால் உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால், லிட்டருக்கு ஐந்து ரூபாயை உயர்த்த வேண்டும் என பால் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், நந்தினி பாலின் விலையை உயர்த்துவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு பாலின் விலையை உயர்த்த வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் கே.எம்.எப்., தலைவர் பீமா நாயக்கிடம் முறையிட்டனர். இது குறித்து முதல்வர் சித்தராமையாவுடன் பேச்சு நடத்தி, முடிவு எடுக்கப்படும் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

