ADDED : ஜூலை 17, 2026 09:24 PM
நம்பிக்கை துரோகம்! அயோத்தி ராமர் கோவிலில் நியமிக்கப்பட்டுள்ள அறக்கட்டளை, நன்கொடை விவகாரத்தில் நம்பிக்கை துரோகம் இழைத்துள்ளது. இந்த அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ளவர்கள் பிரதமரால் நியமிக்கப்பட்டவர்கள். எனவே, மழைக்கால கூட்டத்தொடரில், நன்கொடை திருட்டு குறித்து பிரதமர் மவுனம் கலைக்க வேண்டும். ஜெய்ராம் ரமேஷ் பொதுச் செயலர், காங்கிரஸ்
பா.ஜ.,விடம் சரண்! மாநில வக்பு வாரியத்தில், இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை நியமிக்கும் விதிமுறை உட்பட, திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்தை அமல்படுத்த கேரள காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. அவமானகரமான இந்த செயல், ஆளும் அரசு, பா.ஜ.விடம் முழுமையாக சரணடைந்து விட்டதை எடுத்துக்காட்டுகிறது. பினராயி விஜயன் கேரள எதிர்க்கட்சித் தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூ.,
விவாதிக்க வேண்டும்! நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை எளிதாக்கும் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதாவை பார்லிமென்டில் கொண்டு வருவதற்கு முன் எதிர்க்கட்சியினருடன் மத்திய அரசு விவாதிக்க வேண்டும். அவ்வாறு விவாதிக்க தயங்குவது ஏன்? எதிர்க்கட்சிகளின் ஆதரவின்றி இந்த மசோதாவை நிச்சயம் நிறைவேற்ற முடியாது. கே.சி.வேணுகோபால் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
