கும்பல் வன்முறையால் 650 பேர் பலி: கலங்க வைக்குது ஐ.நா., 'ரிப்போர்ட்'
கும்பல் வன்முறையால் 650 பேர் பலி: கலங்க வைக்குது ஐ.நா., 'ரிப்போர்ட்'
ADDED : ஆக 18, 2024 09:18 AM

புதுடில்லி: வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் 650 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா.,., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். அங்கு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அங்கு அமைந்துள்ளது.
விசாரணை
ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டங்கள், கலவரம் குறித்து ஐ.நா., மனித உரிமைகள் ஆணையம் 10 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஜூலை 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை 400 பேரும், ஆகஸ்ட் 5,6ம் தேதிகளில் 250 பேரும் உயிரிழந்துள்ளனர். கைது, உயிர் பலி குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு
ஆகஸ்ட் 15ம் தேதி ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்த முன்னாள் பிரதமரின் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களை மூங்கில் குச்சிகள், இரும்பு கம்பிகள் மற்றும் குழாய்களுடன் ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்கியுள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்பு, வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களைத் தடுக்க அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபத்தில் இருக்கும் மக்களை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

