ADDED : மார் 27, 2024 12:52 AM
கோட்டா,:ராஜஸ்தானில் 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டில் மட்டும் இது ஆறாவது தற்கொலை என போலீசார் கூறினர்.
உத்தர பிரதேச மாநிலம் கன்னவுஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது உரூஜ், 20. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரின் விக்யான் நகர் விடுதி ஒன்றில் ஓராண்டாக தங்கி, நீட் தேர்வு பயிற்சிப் பள்ளியில் படித்து வந்தார்.
நேற்று அதிகாலையில் தன் அறையில் இருந்த மின்விசிறியில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த விக்யான் நகர் போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது பெற்றோருக்கு தகவல் கூறப்பட்டது. மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கடந்த ஜனவரி முதல் இதுவரை கோட்டா நகரில் நீட் பயிற்சி பெறும் ஆறு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுவே, கடந்த 2023ல் 26 ஆக இருந்தது.
நீட் எனப்படும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே 5ம் தேதி நடக்கிறது.

