சபரிமலையில் புதிய பஸ்மக்குளம் கேரள உயர்நீதிமன்றம் தடை
சபரிமலையில் புதிய பஸ்மக்குளம் கேரள உயர்நீதிமன்றம் தடை
ADDED : ஆக 22, 2024 02:52 AM
சபரிமலை:சபரிமலையில் புதிதாக பஸ்ம குளம் அமைக்கும் பணிக்கு கேரள உயர்நீதிமன்றம் இரண்டு வாரம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐதீகங்களுடன் தொடர்புடையது பஸ்ம குளம். இது தற்போது சன்னிதானம் பின்புறம் கோயில் சுற்றுப்புறத்தின் மேற்கு பகுதியில் இந்த குளம் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் பஸ்ம குளத்தில் பக்தர்கள் குளித்த பின்னர் ஐயப்பனை தரிசிப்பது வழக்கமாக இருந்தது. அதுபோல அங்க பிரதட்சணம் செய்யும் பக்தர்களும் பஸ்ம குளத்தில் குளித்த பின்னரே வந்து இங்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
தற்போது குளம் அமைந்துள்ள இடம் தாழ்வான பகுதி என்பதால் இங்குள்ள பல கட்டடங்களில் உள்ள கழிவு நீர் எளிதாக பஸ்ம குளத்துக்குள் வந்துவிடுகிறது. அதுபோல மழைக்காலங்களில் தண்ணீர் இந்த குளத்தில் வந்து தேங்குகிறது. இதை தவிர்க்கும் வகையில் மேடான பகுதியில் கோயிலின் கிழக்கு பக்கம் பஸ்ம குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் அடிக்கல் நாட்டினார்.
இதை எதிர்த்து பக்தர் ஒருவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் விசாரணை நடத்திய சபரிமலை டிவிஷன் பெஞ்ச், புதிய பஸ்ம குளம் அமைப்பது தொடர்பாகஉயர்மட்ட குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளதா, எதற்காக பத்ம குளம் தற்போது உள்ள இடத்திலிருந்து மாற்றப்படுகிறது என்று கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள் இரண்டு வாரத்துக்கு பணிகளை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டனர்.