இந்தியாவின் உண்மையான எதிரி இதுதான்: விளக்கிய பிரதமர் மோடி!
இந்தியாவின் உண்மையான எதிரி இதுதான்: விளக்கிய பிரதமர் மோடி!
ADDED : செப் 20, 2025 01:34 PM

ஆமதாபாத்: ''இந்தியாவின் உண்மையான எதிரி பிற நாடுகளை சார்ந்திருப்பது தான். இந்தியாவின் இந்த எதிரியைத் தோற்கடிக்க நாம் ஒன்றுபட வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
குஜராத்தின் பாவ் நகரில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: இன்று, நவராத்திரி பண்டிகை தொடங்கவிருக்கும் வேளையில் நான் பாவ்நகருக்கு வந்துள்ளேன். இந்த ஆண்டு, ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக சந்தைகள் அதிக வளர்ச்சியை சந்திக்கும். எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்த வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
தன்னம்பிக்கை
இந்தியாவின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே ஒரு மருந்துதான் உள்ளது, அதுதான் தன்னம்பிக்கை. வளர்ச்சிக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.
காங்கிரஸ் நமது நாட்டின் இளைஞர்களுக்கு பெரும் தீங்கு விளைவித்தது.உலகம் முழுவதும் பொருட்களை அனுப்புவதற்காக இந்தியா வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6 லட்சம் கோடி செலுத்துகிறது. இந்த தொகை நமது பாதுகாப்புத்துறை பட்ஜெட்டுக்கு சமம் ஆகும்.
முதுகெலும்பு
பெரிய கப்பல்களை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் கடல்சார் துறையை வலுப்படுத்தவும் அரசு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. உலகளாவிய கடல்சார் சக்தியாக இந்தியாவின் எழுச்சிக்கு இந்தியாவின் துறைமுகங்கள் முதுகெலும்பாக உள்ளன. ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது; பெரிய கப்பல்கள் உருவாக்கப்படும் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்.
மிகப்பெரிய எதிரி
இந்தியாவில் திறனுக்கு ஒருபோதும் பற்றாக்குறை இருந்ததில்லை. ஆனால் காங்கிரசுக்கு ஆட்சி காலத்தில் அதனை பயன்படுத்த திறனில்லை. இன்று, இந்தியா உலகளாவிய சகோதரத்துவ உணர்வோடு முன்னேறி வருகிறது. உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமக்கு எந்த எதிரியும் இருந்தால், அது மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுதான் நமது மிகப்பெரிய எதிரி. இந்தியாவின் இந்த எதிரியைத் தோற்கடிக்க நாம் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.