டில்லி மிருகக்காட்சி சாலை 'ஆப்'பில் பார்வையாளர்களை கவர புதிய அப்டேட்
டில்லி மிருகக்காட்சி சாலை 'ஆப்'பில் பார்வையாளர்களை கவர புதிய அப்டேட்
ADDED : ஆக 09, 2024 02:18 AM

அலி கஞ்ச்:பார்வையாளர்களின் வருகையை அதிகரிப்பதற்காக டில்லி மிருகக்காட்சி சாலையின் மொபைல் செயலியை மேம்படுத்தியுள்ளது.
மத்திய டில்லியின் புரானா குய்லா பகுதியில் உயிரியல் பூங்க 176 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கே சிறுவர்களை கவரும் வகையில் பல்வேறு விலங்கினங்களும் பறவையினங்களும் உள்ளன.
மிருகக்காட்சி சாலைக்கு ஜூலை மாதத்தில் 1,16,783 பார்வையாளர்கள் வந்துள்ளனர். முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை.
'டில்லி ஜூ'
இதுகுறித்து உயிரியல் பூங்கா இயக்குனர் சஞ்சீத் குமார் கூறியதாவது:
மிருகக்காட்சிசாலையில் வார நாட்களில் 8,000 முதல் 10,000 பேர் பார்வையிட முடியும். வார இறுதி நாட்களில் 15,000 - 20,000 பேர் பொழுதுபோக்க முடியும். ஆனால் இந்த எண்ணிக்கையை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. மிருகக்காட்சி சாலையை பார்வையிட வசதியாக 'டில்லி ஜூ' என்ற மொபைல் செயலியை டிக்கெட் முன்பதிவுக்காக அறிமுகம் செய்திருந்தோம். அந்த செயலியை தற்போது பார்வையாளர்களை கவரும் வகையில் மேம்படுத்தியுள்ளோம்.
கூடுதல் அம்சங்கள்
இந்த மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மிருகங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் இந்த செயலியில் தற்போது கிடைக்கும். இதன் வாயிலாக, பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்பது நோக்கம்.
மிருகங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும் தகவல் பலகைகளாக காட்சிக்கு வைத்திருக்கிறோம். இவை அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும்.
பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, விலங்கியல் பூங்கா அதிகாரிகள் பயன்பாட்டில் தகவல், அறிவிப்புகள் மற்றும் பார்வையாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கூறினார்.
விலங்கைத் தத்தெடுக்க வாய்ப்பு
பிறந்த நாள் மற்றும் திருமண நாள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளைக் கொண்டாடும் வகையில் வனவிலங்கை தத்தெடுக்கும் வாய்ப்பை டில்லிவாசிகளுக்கு டில்லி உயிரியல் பூங்கா விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்காக கட்டணம் வசூலிக்கப்படும். அந்தத் தொகை, உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் பராமரிப்புக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விலங்குகளை தத்தெடுக்கும் நபர்களுக்கு ஒரு சான்றிதழ், புகைப்படம் வழங்கப்படும். குறிப்பிட்ட கால அளவில் விலங்கை தத்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி, ஒரு நாள் கூட விலங்குகளை தத்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.