அடுத்தவர் துறையில் தலையிடும் அதிகப் பிரசங்கி அமைச்சர்கள்
அடுத்தவர் துறையில் தலையிடும் அதிகப் பிரசங்கி அமைச்சர்கள்
ADDED : மே 29, 2024 04:44 AM

கர்நாடகாவில் கடந்த ஆண்டு மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முதல்வர் பதவிக்கு சித்தராமையா, சிவகுமார் இடையே போட்டி எழுந்தது. ராகுல் ஆதரவுடன் சித்தராமையா முதல்வர் ஆனார். சிவகுமாரை சமாளிக்க அவருக்கு, துணை முதல்வர் பதவி கொடுத்தனர்.
அப்போது, ஐந்து முறைக்கு மேல் வெற்றி பெற்ற, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. அதே நேரம் இரண்டு, மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர்களுக்கு பதவி கிடைத்தது. இதனால் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்தனர். தங்களை விட வயதிலும், அனுபவத்திலும் இளையவர்களான அமைச்சர்கள் தங்களை மதிப்பது இல்லை என, ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
ஏதாவது ஒரு பிரச்னை
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி கொடுத்து, சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் பதவியில் இருக்கும் அமைச்சர்கள், தங்கள் பணியை சரியாக செய்கின்றனரா என்று கேட்டால், 'இல்லை' என்பதே பதிலாக உள்ளது.
தங்கள் துறையில் என்ன நடக்கிறது என்று பார்க்காமல், அடுத்தவர் துறையில் தேவையின்றி தலையிடும், 'அதிக பிரசங்கி' அமைச்சர்கள் சிலர் உள்ளனர்.
மூத்த எம்.எல்.ஏ., பரமேஸ்வர், உள்துறை அமைச்சராக உள்ளார். மாநிலத்தில் தினமும் ஒரு பிரச்னை நடக்கிறது. இதைத் தடுக்க அவரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஆனால் தன் துறையை தவிர்த்து, மற்ற துறைகளில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறார். மழை பெய்வதால் பெங்களூரு சாலைகளில் பள்ளம் ஏற்படுகிறது. இதை தடுக்க முடியாது என, சமீபத்திய பேட்டியில் கூறினார்.
பிரியங்க் கார்கே
பெங்களூரு நகர வளர்ச்சி துறை, துணை முதல்வர் சிவகுமாரிடம் உள்ளது. சாலை பள்ளங்கள் குறித்து, சிவகுமார் பதில் அளிக்காத நிலையில், முந்திரிக்கொட்டை போல முந்திக் கொண்டு, பரமேஸ்வர் பதில் அளித்தார்.
இதுபோல கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கேயிடம், தகவல் தொழில்நுட்ப துறை கூடுதலாக கொடுக்கப்பட்டு உள்ளது.
தனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் என்ன முன்னேற்றம் செய்வது என்று யோசிக்காமல், பா.ஜ.,வினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, பதில் அளித்து காலத்தை ஓட்டி வருகிறார்.
சட்டசபை கூட்டத்தொடரில் கூட, எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விக்கு, முதல் ஆளாக பதில் சொல்வது பிரியங்க் கார்கேயாக தான் இருக்கும். இவரும் அடுத்தவர் துறையில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதில் கெட்டிக்காரர்.
சிவகுமாரிடம் துணை முதல்வர், பெங்களூரு நகர வளர்ச்சி, நீர்ப்பாசனம் ஆகிய பொறுப்புகள் உள்ளன. ஆனாலும் அவரும் அடுத்த அமைச்சர்கள் துறையில் தேவையின்றி தலையிடுவதாகவும், அடுத்த துறைகளின் அதிகாரிகளை அழைத்து, எப்படி வேலை செய்ய வேண்டும் என்று, 'பாடம்' எடுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இது, அந்தந்த துறைகளை சார்ந்த அமைச்சர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. முதல்வரிடம் புகார் பத்திரம் வாசித்ததால், தற்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.
பெயருக்கு அமைச்சர்கள்
தொழில் அமைச்சர் எம்.பி., பாட்டீல், ஜவுளி துறையில் தலையிட்டதால் அவருக்கும், அமைச்சர் சிவானந்தா பாட்டீலுக்கும் பிரச்னை ஏற்பட்டது.
இதர அமைச்சர்களான கால்நடை - வெங்கடேஷ்; ஜவுளி - சிவானந்தா பாட்டீல்; தோட்டக்கலை - மல்லிகார்ஜுன்; கன்னடம் மற்றும் கலாசாரம் - சிவராஜ் தங்கடகி; மருத்துவ கல்வி - சரண்பிரகாஷ் பாட்டீல்; மீன்வளம் - மங்கள் வைத்யா; நகராட்சி நிர்வாகம் - ரஹிம்கான்; திட்டமிடல் - டி.சுதாகர்; உயர்கல்வி - எம்.சி.சுதாகர்; விளையாட்டு -நாகேந்திரா.
இவர்கள் எல்லாரும் பெயருக்கு தான், அமைச்சராக உள்ளனர். களத்தில் இறங்கி வேலை செய்வது இல்லை. அதே நேரம், அடுத்தவர்கள் துறையில் தலையிடுவது இல்லை. தங்கள் துறைகளில் யாரும் தலையிடவும் விரும்ப மாட்டார்கள்.
காங்கிரஸ் அமைச்சர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றாலும், ஒற்றுமையாக இருப்பது போல 'பாசாங்கு' செய்து கொள்கின்றனர்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், அமைச்சரவையில் மாற்றம் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அப்போது அதிக பிரசங்கித்தனம் செய்யும், அமைச்சர்கள் பதவி போகுமா என்பது தெரியவில்லை.
- நமது நிருபர் -