கைதியாக உள்ள ரஷித் எம்.பி.,யாக பதவியேற்க என்.ஐ.ஏ., அனுமதி
கைதியாக உள்ள ரஷித் எம்.பி.,யாக பதவியேற்க என்.ஐ.ஏ., அனுமதி
ADDED : ஜூலை 02, 2024 01:43 AM

புதுடில்லி, சிறையில் இருந்தபடியே ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் வெற்றி பெற்ற 'இன்ஜினியர்' ரஷித் என்று அழைக்கப்படும் அப்துல் ரஷித் ஷேக், எம்.பி.,யாக பதவியேற்க என்.ஐ.ஏ.,அனுமதி அளித்தது.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இன்ஜினியர் ரஷித், 2019 முதல் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட இன்ஜினியர் ரஷித், முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான ஒமர் அப்துல்லாவை, இரண்டு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
புதிய லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எம்.பி.,யாக பதவியேற்க இடைக்கால ஜாமின் அளிக்கும்படி, டில்லியில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், இன்ஜினியர் ரஷித் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சமீபத்தில், இதை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 1க்குள் பதிலளிக்கும்படி என்.ஐ.ஏ.,வுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்ஜினியர் ரஷித் எம்.பி.,யாக பதவியேற்க தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என என்.ஐ.ஏ., தெரிவித்தது.
இதன்படி, அவர் இன்று எம்.பி.,யாக பதவியேற்பார் என, கூறப்படுகிறது. இதற்கான நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விரைவில் அறிவிக்க உள்ளது.