UPDATED : மே 02, 2024 06:21 AM
ADDED : மே 02, 2024 01:29 AM

புதுடில்லி,'உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு நீண்ட கோடை விடுமுறை அளிப்பதை விமர்சிப்போர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட, நீதிபதிகளுக்கு விடுமுறை இல்லை என்பதை புரிந்து கொள்வதில்லை' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேற்கு வங்க அரசின் அனுமதி இல்லாமல், சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்த அமர்வு, வரும் 20ம் தேதியிலிருந்து நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை என்பதால், வாதங்களை நிறைவு செய்யும்படி இரு தரப்புக்கும் அறிவுறுத்தியது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு நீண்ட விடுமுறை அளிக்கப்படுகிறது என, ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். ஆனால், நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியாது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட எங்களுக்கு விடுமுறை இல்லை. அந்த நாட்களிலும் கருத்தரங்கு, மற்ற பணிகளை நாங்கள் கவனிக்க வேண்டும். விமர்சனம் செய்வோர் இதை புரிந்து கொள்வதில்லை. விடுமுறை நாட்களில், தாங்கள் விசாரிக்கும் வழக்குகளில் நீதிபதிகள் தீர்ப்பு எழுதுவர். நடைமுறை தெரியாதவர்கள் இதை விமர்சிக்கின்றனர்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினசரி 50- - 60 வழக்குகளை கையாள்கின்றனர். விடுமுறை எடுக்க அவர்கள் தகுதியானவர்கள். நீதிபதிகள் எப்படி செயல்படுகின்றனர் என்பது விமர்சிப்போருக்கு தெரியாது,'' என்றார்.

