இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை: மத்திய அரசு
இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை: மத்திய அரசு
ADDED : ஆக 18, 2024 02:23 AM

புதுடில்லி: 'இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை; பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, மத்திய சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.
ஆப்ரிக்காவில் வேகமாக பரவி வரும், 'மங்கி பாக்ஸ்' எனப்படும் குரங்கு காய்ச்சல் பரவலை, உலகளவில் கவலை அளிக்கக்கூடிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. ஆப்ரிக்க நாடுகளில் கடந்த ஆண்டு ஜனவரி முதல், மங்கி பாக்ஸ் பரவல் மிக மோசமாக உள்ளன. இதுவரை 27,000 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 1,100 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதை தொடர்ந்து, மங்கி பாக்ஸ் தொற்றை சர்வதேச அளவில் கவலை அளிக்கக்கூடிய தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக சர்வதேச அளவிலான சுகாதார அவசர நிலையையும் அறிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தலைமையிலான ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. அப்போது, குரங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:
குரங்கு காய்ச்சல் தொடர்பான அவசர நிலை எச்சரிக்கை, கடந்த 2022ல் ஐ.நா., சபை வெளியிட்டது முதல், தற்போது வரை நம் நம் நாட்டில், 30 பேருக்கு மட்டுமே இந்த அறிகுறி தென்பட்டது. கடைசியாக கடந்த மார்ச்சில், குரங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த நபருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நாட்டில் யாருக்கும் குரங்கு காய்ச்சல் அறிகுறி இல்லை. இருப்பினும், நிலைமையை சுகாதார அமைச்சகம் கூர்ந்து கவனித்து வருகிறது.
எந்த நேரத்திலும் பரவல் அதிகரிக்கும் என்பதால், அதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியில் சோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துறைமுகம், விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.