2030ல் இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி!
2030ல் இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி!
ADDED : அக் 15, 2025 09:09 PM

புதுடில்லி: வரும் 2030ம் ஆண்டு காமென்வெல்த் போட்டியை இந்தியாவின் ஆமதாபாத்தில் நடத்த காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது நமது நாட்டுக்கே பெருமையளிக்கக் கூடிய விஷயம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
72 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்த இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் போட்டி போட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காமன்வெல்த் விளையாட்டு குழுவினர் ஆமதாபாத்தில் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியை நடத்த இந்தியாவின் ஆமதாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் விளையாட்டுத்துறையில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. நவ., 26ம் தேதி கிளாஸ்கோவில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு பொதுக்கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. இதன்மூலம், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் நகரங்களின் பட்டியலில் ஆமதாபாத்தும் இணையவிருக்கிறது.
ஆமதாபாத்தில் உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன. 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனல் நடந்த மிகப்பெரிய நரேந்திர மோடி மைதானமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்; 'இந்தியாவிற்கு இது மிகவும் பெருமைக்குரிய நாள். 2030ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஆமதாபாத்தில் நடத்தும் இந்தியாவின் முயற்சியை காமன்வெல்த் சங்கம் அங்கீகரித்ததற்கு, இந்தியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உலக விளையாட்டு வரைபடத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்ய பிரதமர் மோடி மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளுக்கு இது ஒரு மகத்தான அங்கீகாரமாகும். உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், திறமையான வீரர்களை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், பிரதமர் இந்தியாவை ஒரு சர்வதேச விளையாட்டு தளமாக மாற்றியுள்ளார், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.