ADDED : அக் 15, 2025 07:10 PM

கொச்சி: கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா 80, மாரடைப்பால் காலமானார்.
கென்யாவில் 2008 முதல் 2013 வரை பிரதமராக இருந்தவர் ரைலா ஒடிங்கா, இவர், கே ரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கூத்தாட்டுக்குளத்திற்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்திருந்தார். ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்திற்குள் இன்று காலை நடைப்பயணத்தின் போது அவர் மாரடைப்பால் சரிந்து விழுந்தார். அதை தொடர்ந்து அவர், கூத்தாட்டுக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல் தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ஒடிங்கா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்:
எனது அன்பு நண்பரும், கென்யாவின் முன்னாள் பிரதமருமான ஒடிங்காவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் ஒரு உயர்ந்த அரசியல்வாதியாகவும், இந்தியாவின் அன்புக்குரிய நண்பராகவும் இருந்தார். குஜராத் முதல்வராக நான் இருந்த நாட்களில் இருந்து அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, எங்கள் தொடர்பு பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது. இந்தியா, நமது கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் பண்டைய ஞானத்தின் மீது அவருக்கு ஒரு அன்பு இருந்தது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளில் அது தெரிந்தது. குறிப்பாக ஆயுர்வேதம் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள், அவரது மகளின் ஆரோக்கியத்தில் அவற்றின் நேர்மறையான தாக்கத்தைக் கண்ட அவர் அவற்றைப் பாராட்டினார். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கென்யா மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.