ADDED : மார் 28, 2024 03:38 AM

கலபுரகி, : “கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையை யாரும் ஏற்கவில்லை,” என, அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., ஆசை காட்டி மோசம் செய்யும் கட்சி. மாண்டியா சீட் தருவதாக, சுமலதாவை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர். மாண்டியாவில் இப்போது குமாரசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து, பிரசாரம் செய்தாலும் வெற்றி பெற மாட்டார்.
மாண்டியா மண்ணில் பிறந்த ஸ்டார் சந்துருவை, நாங்கள் வேட்பாளராக களம் இறக்கி உள்ளோம். தென் மாநிலங்களில் மோடி சுனாமி இல்லை. கர்நாடகாவில் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற மாட்டோம் என்ற பயத்தில், ம.ஜ.த.,வை கூட்டணியில் சேர்த்து உள்ளனர். தைரியம் இருந்தால் சொந்த பலத்தில் வெற்றி பெற்று காட்டட்டும்.
பா.ஜ.,வில் தலைமை இல்லை. விஜயேந்திரா, அசோக் தலைமையை யாரும் ஏற்கவில்லை. பா.ஜ., தேசிய செயலர் சந்தோஷ், முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் இடையில், இன்னும் மோதல் நீடிக்கிறது.
கர்நாடக பா.ஜ., ஒரு குடும்பத்தின் கையில் சிக்கி உள்ளதாக, ஈஸ்வரப்பா, சதானந்த கவுடா கூறி உள்ளனர். ரவி, பசனகவுடா பாட்டீல் எத்னால், பிரதாப் சிம்ஹா ஆகியோர், ஹிந்துத்துவா பற்றி பேசுவதால், கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக, பா.ஜ., தொண்டர்களே கூறுகின்றனர்.
'கோ பேக்' ஷோபா, 'கோ பேக்' சுதாகர் இது எல்லாம் பா.ஜ., கட்சியில் தான் நடக்கிறது. பிரதமர் மோடி வந்தால், எங்களை அழைப்பது இல்லை என, ம.ஜ.த.,வினர் புலம்புகின்றனர். பிரதமர் மோடிக்கு காங்கிரசை விட்டால் பேசுவதற்கு, வேறு ஒன்றும் இல்லை. வளர்ச்சிப் பணிகளை கூறி, ஓட்டு கேட்காமல் கடவுள், மதத்தின் பெயரில் ஓட்டு கேட்கிறார்.
தோல்வி பயத்தால் மல்லிகார்ஜுன கார்கே தேர்தலில் போட்டியிடவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறி உள்ளார். அவருக்கு பொது அறிவு இல்லை என்று நினைக்கிறேன்.
கார்கேவுக்கு தேசத்தை காப்பாற்றும் பெரிய பொறுப்பு உள்ளது. இதனால் அவர் போட்டியிடவில்லை. காங்கிரசில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதை விட்டுவிட்டு, பா.ஜ.,வில் என்ன நடக்கிறது என்பதை, அசோக் முதலில் பார்க்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

