யாரும் ஒத்துழைக்கவில்லை: சிவகுமாரிடம் கவுதம் கதறல்
யாரும் ஒத்துழைக்கவில்லை: சிவகுமாரிடம் கவுதம் கதறல்
ADDED : ஏப் 12, 2024 05:54 AM

கோலார்: 'கோலார் லோக்சபா தொகுதியில், தலைவர்கள் எனக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை' என, மாநில காங்., தலைவர் சிவகுமாரிடம் கோலார் காங்கிரஸ் வேட்பாளர் கவுதம் புகார் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில், கோலார் - தனி தொகுதியில் தன் மருமகன் சிக்க பெத்தண்ணாவுக்கு, சீட் கொடுக்க வேண்டும் என, உணவுத்துறை அமைச்சர் முனியப்பா கோரினார். இதற்கு முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் கோஷ்டி, முட்டுக்கட்டை போட்டது.
'முனியப்பா குடும்பத்தினரை தவிர, வேறு யாருக்கு சீட் கொடுத்தாலும் நாங்கள் பணியாற்றுவோம். இல்லையென்றால் பதவியை ராஜினாமா செய்வோம்' என, மிரட்டல் விடுத்தனர்.
சூழ்நிலை மோசமாவதை உணர்ந்த காங்கிரஸ் தலைமை, பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் விஜயகுமார் மகன் கவுதமை, கோலார் வேட்பாளராக களமிறக்கியது. ஆரம்பத்தில் முணுமுணுத்த முனியப்பா, அதன்பின் மவுனமானார்.
குழப்பம் ஓய்ந்தது என, கட்சி மேலிடம் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் தலைவலி துவங்கி உள்ளது. ரமேஷ்குமாரோ, முனியப்பாவோ கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாமல், மவுனமாக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மாநில காங்., தலைவருமான, துணை முதல்வர் சிவகுமாரை, கோலார் வேட்பாளர் கவுதம், நேற்று காலை பெங்களூரில் சந்தித்தார். 'உள்ளூர் தலைவர்கள் யாரும், தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை. எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை' என புலம்பி தள்ளினார்.
அவரை சிவகுமார் சமாதானம் செய்து, பிரச்னையை சரி செய்வதாக கூறி அனுப்பினார்.

