ம.ஜ.த.,வில் யாரையும் வளர விடமாட்டார்கள்: மரிதிப்பே கவுடா
ம.ஜ.த.,வில் யாரையும் வளர விடமாட்டார்கள்: மரிதிப்பே கவுடா
ADDED : ஏப் 12, 2024 05:52 AM

மாண்டியா: ''நான் 30 ஆண்டுகள், ம.ஜ.த., கொட்டகையில் இருந்தேன். முன்னாள் முதல்வர் குமாரசாமியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் யாரையும் வளர விடமாட்டார்கள்,'' என மேலவை முன்னாள் துணைத் தலைவர் மரிதிப்பேகவுடா குற்றம் சாட்டினார்.
மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமியின் முன்பு எம்.எல்.ஏ.,க்களும் கூட பயந்தபடி நிற்க வேண்டும். இச்சூழ்நிலை ம.ஜ.த.,வில் உள்ளது. நான் 30 ஆண்டுகள் அந்த கட்சி கொட்டகையில் இருந்தேன். யாரையும் வளர விடமாட்டார்கள்.
ஒக்கலிகர் சமுதாயத்தின், மற்ற நபர்கள் தலைவர்களாக வளர்வதை, தேவகவுடா, குமாரசாமியால் சகிக்க முடியாது. எஸ்.எம்.கிருஷ்ணா இரண்டாவது முறை முதல்வராவதை தடுத்தனர்.
தேவகவுடாவை பிரதமராக்கியது, குமாரசாமியை முதல்வராக்கியது காங்கிரஸ். 2018 சட்டசபை தேர்தலில், 83 தொகுதிகள் பெற்றிருந்த காங்கிரஸ், ம.ஜ.த.,வின் குமாரசாமியை முதல்வராக்கியது. ஆனால் இவர் காங்கிரசுக்கு என்ன செய்தார்.
மத்திய அரசிடம், மாநிலத்தின் வரி பங்கை கேட்ட சுரேஷுக்கு, 'தேசத்துரோகி' பட்டம் கட்டினார். மாநிலத்தின் பங்கை கேட்பது தவறா. மகனை தோற்கடித்ததால், பட்ஜெட்டில் மாண்டியாவுக்கு அறிவிக்கப்பட்ட 8,000 கோடி ரூபாயில், ஒரு பைசாவையும் அன்றைய முதல்வர் குமாரசாமி வழங்கவில்லை.
விவசாயிகளுக்கு எதிரான ஏ.பி.எம்.சி., சட்டத்தை செயல்படுத்தியது பா.ஜ., அரசு. இதை ஆதரித்தது ம.ஜ.த., கட்சி ஆனால் காங்கிரஸ் அரசு, விவசாயிகள், ஏழைகளை காப்பாற்றுகிறது. பசியில்லா கர்நாடகாவை உருவாக்க, முதல்வர் சித்தராமையா உறுதி பூண்டுள்ளார். இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
இவ்வாறு அவர்கூறினார்.

