ராகுல் பிரதமர் ஆவார் என்று இப்போது யாரும் கூறுவதில்லை: பிரகாஷ் ஜாவடேகர்
ராகுல் பிரதமர் ஆவார் என்று இப்போது யாரும் கூறுவதில்லை: பிரகாஷ் ஜாவடேகர்
ADDED : மார் 22, 2024 04:26 AM

திருவனந்தபுரம்: 'ராகுல் பிரதமர் ஆவார் என்று இப்போது யாரும் கூறுவதில்லை,' என்று முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்
கேரள மாநில தேர்தல் பொறுப்புக்குழு தலைவரான பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: மத்தியில் மோடி அரசு மீண்டும் வரும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூட உறுதியாக நம்புகின்றனர். பா.ஜ., கூட்டணிக்கு 370 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக கிடைக்கும்.
தேர்தலுக்குப் பின்னர் கேரளாவில் நிரந்தரமாக பல மாற்றங்கள் ஏற்படும். எந்தவித பாகுபாடும் பார்க்காமல் அனைத்து நலத்திட்டங்களின் பலன்களையும் கேரள மக்களுக்கு மோடி அளித்துள்ளார்.
1.5 கோடி பேருக்கு இலவச அரிசி, 50 லட்சம்இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் முத்ரா கடன், 35 லட்சம் விவசாயிகளுக்கு கிசான் சம்மான் திட்டம், 4 லட்சம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு, 20 லட்சம் குடும்பங்களுக்கு ஜல்ஜீவன் குடிநீர் இணைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
2047க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மோடி அரசு தான் மீண்டும் வரும் என்று எல்லா வாக்காளர்களுக்கும் தெரியும். ராகுல் பிரதமர் ஆவார் என்று இப்போது யாரும் கூறுவதில்லை. கேரளாவில்5 முதல் 10 தொகுதிகள்வரை கண்டிப்பாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

