ADDED : ஜூன் 12, 2024 01:07 AM
புதுடில்லி,
டில்லியில், ஜனாதிபதி மாளிகையில் நடந்த மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவின் போது நடமாடியது, சாதாரண பூனை என, போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக, நரேந்திர மோடி, கடந்த 9ல் பதவியேற்றார். தொடர்ந்து, அவரது அமைச்சரவையும் பதவியேற்றது.
அப்போது, பா.ஜ., - எம்.பி., துர்கா தாஸ் உய்கே அமைச்சராக பதவியேற்ற போது, அவருக்கு பின்னால் ஒரு விலங்கு சென்றது போன்ற காட்சி வீடியோ வாயிலாக பரவியது.
இந்த விலங்கு சிறுத்தையாக இருக்குமோ, புலியாக இருக்குமோ என, பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, டில்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவின் போது, காட்டு விலங்கு நடமாடியதாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள், முற்றிலும் தவறானவை.
இது உண்மையல்ல. கேமராவில் பதிவானது வீட்டில் வளர்க்கப்படும் சாதாரண பூனை தான். இது போன்ற தேவையற்ற புரளிகளை பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.