அனைவரும் ஹிந்து வெறியர்கள் அல்ல 'மாஜி' அமைச்சர் ஈஸ்வரப்பா கண்டுபிடிப்பு
அனைவரும் ஹிந்து வெறியர்கள் அல்ல 'மாஜி' அமைச்சர் ஈஸ்வரப்பா கண்டுபிடிப்பு
ADDED : மார் 02, 2025 06:28 AM

ஹூப்பள்ளி: ''பழைய காங்கிரசார் ரத்தத்தில் ஹிந்துத்துவா ரத்தம் ஊறி உள்ளது. அனைவரும் ஹிந்து வெறியர்கள் அல்ல,'' என முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
கடந்த மாதம் பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்ப மேளாவிலும், கோயம்புத்துாரில் ஈஷாவில் நடந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், துணை முதல்வர் சிவகுமாரும் பங்கேற்றார்.
தொடர்ந்து ஆன்மிக நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பது, அக்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, ஹூப்பள்ளியில் நேற்று ஈஸ்வரப்பா அளித்த பேட்டி:
ஒரு வழியாக, துணை முதல்வர் சிவகுமார், உண்மையை உணர்ந்துள்ளார். விரைவில் முதல்வர் சித்தராமையாவும் உணருவார். ஹிந்துத்துவாவுக்கு ஆதரவாக இருப்பது போன்று சிவகுமார் நடிக்கிறாரா, இல்லையா என்பது கடவுளுக்கு தெரியும்.
பழைய காங்கிரசார் ரத்தத்தில் ஹிந்துத்துவா ரத்தம் ஊறி உள்ளது. அனைவரும் ஹிந்து வெறியர்கள் அல்ல. சிலர், முஸ்லிம்களின் ஓட்டு வங்கிக்காக அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர்.
ஹிந்துத்துவா குறித்து சிவகுமாருக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான், பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்ப மேளாவிலும்; மஹா சிவராத்திரியிலும் பங்கேற்றார்.
மஹாத்மா காந்தியும், ஹிந்துத்துவாவை போற்றி உள்ளார். அவரின் கல்லறையிலும் 'ஹே ராம்' என்றே எழுதி உள்ளதே தவிர, 'ஹே ஹே ஜீசஸ்' என்று எழுதவில்லை.
ஹிந்துத்துவா பா.ஜ.,வின் சொத்து அல்ல. ஹிந்துத்துவா என்பது அனைத்து மக்களை மகிழ்விப்பதாகும்.
ஹிந்துத்துவாவை அழிக்க நினைக்கும் நபரும், கட்சியும் நாட்டில் அழிந்து வருகிறது. அரசியல்வாதிகளின் மகள்களை, முஸ்லிம் வாலிபர்கள் விரும்பி, அநீதி இழைக்கும்போது, 'லவ் ஜிகாத்'துக்கு எதிரான சட்டம் சரியானது என்பதை அவர்கள் உணருவர்.
ஒருவரை திருப்திப்படுத்த, ஸ்ரீராமசேனையின் பிரமோத் முத்தாலிக் போன்ற தேச பக்தர்களை தொந்தரவு செய்வது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.