வகுப்பறை கட்டுமான முறைகேடுகள் 24 பொறியாளர்களுக்கு நோட்டீஸ்
வகுப்பறை கட்டுமான முறைகேடுகள் 24 பொறியாளர்களுக்கு நோட்டீஸ்
ADDED : ஜூலை 31, 2024 01:51 AM
சிவில் லைன்ஸ்:மாணவர் - வகுப்பறை விகிதத்தை கருத்தில் கொண்டு, மாநில அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளை கட்டுவதற்கு அப்போதைய கல்வித்துறைச் செயலர், 2015 ஏப்ரலில் அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இதுதொடர்பாக மதிப்பீடு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும்படி, பொதுப்பணித்துறையில் உள்ள இணை அதிகாரிக்கு அவர் கடிதம் அனுப்பினார்.
அதன்பேரில் ஒருங்கிணைந்த மதிப்பீட்டை சமர்ப்பிப்பதற்கு பதிலாக 16 தனித்தனி மதிப்பீடுகளாக பொதுப்பணித்துறை சமர்ப்பித்தது.
இதன்படி, 1033.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 63 டெண்டர்களாக திட்டம் பிரிக்கப்பட்டது.
இறுதியில் கட்டுமானச் செலவு சதுர அடிக்கு 1,200 ரூபாய்க்குள் இருக்கும்படி பொதுப்பணித்துறையின் நோடல் அதிகாரிக்கு அமைச்சகம் அறிவுரை வழங்கியது.
ஆனால் அதை மீறி, 2,292 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் 160 கழிப்பறைகள் கட்ட உத்தரவிட்ட நிலையில், 1,214 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், 37 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது.
திட்டத்தின் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம், பொதுப்பணித்துறையின் செயலராக பதவி வகித்த அப்போதைய தலைமை பொறியாளர் உள்ளிட்ட 24க்கும் மேற்பட்ட பொறியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜூலை 26 அன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தங்கள் பதில்களை சமர்ப்பிக்க அனைவருக்கும் 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.