பல்லாரி சிறையில் தர்ஷனுக்கு 'டிவி' வழங்க அதிகாரிகள் முடிவு
பல்லாரி சிறையில் தர்ஷனுக்கு 'டிவி' வழங்க அதிகாரிகள் முடிவு
ADDED : செப் 08, 2024 03:03 AM

பல்லாரி கொலை வழக்கில்- சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷனின் கோரிக்கையை ஏற்று, அவரது அறைக்கு, 'டிவி' வழங்கப்படும் என அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகர் தர்ஷன். இவர், தன் தோழி பவித்ராவுக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதற்காக ரேணுகாசாமி என்பவரை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ஷன், பவித்ரா உட்பட 15 பேருக்கு எதிராக 4,000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
முதலில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிறை விதிகளுக்கு மாறாக சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான வீடியோக்கள், படங்கள் வெளியாகின. இதை தொடர்ந்து அவர் பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். கொலையில் தொடர்புடைய மற்றவர்கள் வெவ்வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், பல்லாரி சிறையில் உள்ள தர்ஷன், தன் வழக்கு குறித்த விபரங்களை அறிவதற்காகவும், வெளியுலக செய்திகளை தெரிந்து கொள்வதற்காகவும் தன் அறைக்கு டிவி வழங்கும்படி சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்.
சிறை விதிகளுக்கு உட்பட்டு இதை பரிசீலித்த அதிகாரிகள், அவரது அறைக்கு டிவி வழங்க அனுமதி அளித்துள்ளனர்.
நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. குற்றப்பத்திரிகையில் நேற்று வெளியான தகவல்:
சித்ரதுர்காவில் இருந்து ரேணுகாசாமியை காரில் பட்டனகெரே ஷெட்டிற்கு கடத்தி வந்ததும், அவரை தர்ஷன் தாக்கி உள்ளார். சிறிது நேரம் கழித்து, 'எனக்கு பசிக்கிறது' என, ரேணுகாசாமி கூறி உள்ளார். அவருக்கு, தர்ஷன் சிக்கன் பிரியாணி கொடுத்துள்ளார்.
இரண்டு வாய் சாப்பிட்ட பின் தான், பிரியாணி என்று தெரிந்து, அதை துப்பியதுடன், 'பிரியாணி சாப்பிட மாட்டேன்' என கூறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த தர்ஷன், 'உணவை கீழே துப்புகிறாயா' என கேட்டு, மீண்டும் தாக்கி உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.