சிறுவனிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 107 ஆண்டு சிறை
சிறுவனிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 107 ஆண்டு சிறை
ADDED : மார் 02, 2025 03:15 AM

மலப்புரம்: கேரளாவில், 11 வயது சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு, 107 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னனி நெய்தலுார் பகுதியைச் சேர்ந்தவர் மோகனன், 60.
இவர், அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனை தன் வீட்டுக்கு அழைத்து வந்து, யாரும் இல்லாத நேரத்தில் மது கொடுத்து, தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பான புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோகனனை கைது செய்து விசாரித்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை பொன்னனி விரைவு கோர்ட்டில் நடந்தது. இதில், நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பு:
இந்த வழக்கில், 17 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், மோகனன், சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மோகனனுக்கு போக்சோ சட்டத்தின் இருவேறு பிரிவுகளில், தலா 20 மற்றும் 80 ஆண்டு சிறை தண்டனையும், சிறுவர் நீதிச்சட்டத்தின்படி மேலும் ஏழு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.
இதன்படி மெத்தம் 107 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும். இது தவிர, 4.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை வசூலித்து அதை பாதிக்கப்பட்ட சிறுவனிடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.