ADDED : ஆக 15, 2024 03:59 AM

ராம்நகர் : ராம்நகர் சென்னப்பட்டணா தொகுதிக்கு நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட அக்கட்சியின் எம்.எல்.சி., யோகேஸ்வர் ஆர்வம் காட்டுகிறார்.
ஆனால் தங்கள் கோட்டையான சென்னப்பட்டணாவை தக்க வைக்க, பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருக்கும் ம.ஜ.த.,வும் விரும்புகிறது.
குமாரசாமி, தன் மகன் நிகிலை களம் இறக்க நினைக்கிறார். இதனால் வேட்பாளரை தேர்வு செய்யும் விஷயத்தில், இரு கட்சிகளுக்கும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மேலிட தலைவர்கள் அழைப்பின்படி, யோகேஸ்வர் டில்லி சென்றார். 'சென்னப்பட்டணாவில் இருந்து ஐந்து முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆகி உள்ளேன். 'எனக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது; எனக்கே சீட் தர வேண்டும்' என்று, மேலிட தலைவர்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும், மத்திய அமைச்சர் குமாரசாமி சம்மதம் தெரிவித்தால் தான், யோகேஸ்வருக்கு 'சீட்' கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் வரும் 18ம் தேதி மீண்டும் டில்லி வரும்படி, யோகேஸ்வருக்கு, பா.ஜ., மேலிடம் அழைப்பு விடுத்து உள்ளது. அன்றைய தினம் குமாரசாமியை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.