ADDED : மார் 28, 2024 11:01 PM
பெங்களூரு:'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில் குண்டுவெடித்த வழக்கில், 28 நாட்களுக்குப் பின் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் ஷிவமொகா தீர்த்தஹள்ளியின் முஸவீர் ஷாகிப் ஹுசைன், அப்துல் மதின் தாஹா ஆகியோர், குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக சந்தேகம் எழுந்துள்ளது. தலைமறைவாக உள்ள இருவரையும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் 28 நாட்களுக்கு பின், நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து என்.ஐ.ஏ., வெளியிட்ட அறிக்கை:
குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, கர்நாடகாவின் 12 இடங்கள், தமிழகத்தின் 5 இடங்கள், உத்தர பிரதேசத்தின் ஒரு இடத்தில் என்.ஐ.ஏ., சோதனை நடத்தப்பட்டது. விசாரணை அடிப்படையில், முஸவீர் ஷாகிப் ஹுசைன் குண்டுவைத்ததும், அப்துல் மதின் தாஹா உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.
இவர்கள் இருவருக்கும் உதவி செய்ததாக, பெங்களூரின் முஜாமில் ஷரீப் என்பவர், கைது செய்யப்பட்டு உள்ளார். மூன்று பேரின் வீடுகளில் நடத்திய சோதனையில், டிஜிட்டல் உபகரணங்கள், பணம் கிடைத்து உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

