பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஐக்கிய ஜனதா தளத்தில் வாய்ப்பு
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஐக்கிய ஜனதா தளத்தில் வாய்ப்பு
ADDED : மார் 25, 2024 04:49 AM
பாட்னா : பீஹாரில் லோக்சபா தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிட உள்ள, 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் நேற்று வெளியிட்டது. இதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அந்த பிரிவினர் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
இவற்றில், பா.ஜ., 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதி களிலும் போட்டியிட உள்ளன.
லோக் ஜன்சக்தி ராம்விலாஸ் கட்சி ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகியவை தலா ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.
இதில், தற்போது எம்.பி.,க்களாக உள்ள 12 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், சுனில் குமார் பிண்டு, கவிதா சிங் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் 11 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மூவர், முஸ்லிம் மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் போட்டியிட உள்ளனர்.

