'டெங்களூரு' ஆக மாறிய பெங்களூரு சட்டசபையில் எதிர்க்கட்சி கிண்டல்
'டெங்களூரு' ஆக மாறிய பெங்களூரு சட்டசபையில் எதிர்க்கட்சி கிண்டல்
ADDED : ஜூலை 23, 2024 05:53 AM
பெங்களூரு: பெங்களூரு உட்பட கர்நாடகாவில் டெங்கு பரவல் குறித்து, சட்டசபையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் விவாதத்தில் ஈடுபட்டன.
சட்டசபையில், பூஜ்ய வேளையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர் அசோக்: கர்நாடகாவில், டெங்கு, காலரா உள்ளிட்ட தொற்று நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.
சுகாதார துறை அளித்துள்ள தகவல்படி, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை, மொத்தம் 10 பேர், டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர்.
குழந்தைகளே அதிகமாக பாதித்திருப்பது கவலை அளிக்கிறது. குறிப்பாக, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 - 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் 4,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு பாதிப்புக்கு உள்ளான சிலருக்கு, மருத்துவ பரிசோதனையில் உறுதியாகவில்லை என்று தெரியவந்துள்ளது.
எனவே அரசு இது குறித்தும் யோசனை செய்ய வேண்டும். டெங்குவால், உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
நோய் பரவாமல் தடுப்பதற்கு, குடிசை வாழ் பகுதிகளுக்கு, மாநில அரசு கொசு வலை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்து, நகைப்பை ஏற்படுத்துகிறது.
பெங்களூரில் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம், பெங்களூரு, தற்போது 'டெங்களூரு' ஆக மாறி உள்ளது.
அமைச்சர் தினேஷ் குண்டுராவ்: குடிசை வாழ் பகுதிகளுக்கு கொசு வலை வழங்கப்படவில்லை. டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொசு, பகலில் தான் கடிக்கும். இரவு நேரத்தில் கடிக்காது. எனவே கொசு வலை தேவையில்லை.
முதல்வர் சித்தராமையா: பெங்களூரு மாநகராட்சி மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளோம். அரசும் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆஷா ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வழிகாட்டு விதிமுறைகளை ஏற்கனவே அறிவித்துள்ளோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.