'உள்நோக்கம் இன்றி பெண்ணின் கையை பிடித்து இழுத்தது குற்றமல்ல!' உயர் நீதிமன்றம் உத்தரவு
'உள்நோக்கம் இன்றி பெண்ணின் கையை பிடித்து இழுத்தது குற்றமல்ல!' உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 13, 2025 04:24 AM

மதுரை: 'உள்நோக்கம் இன்றி, பெண்ணின் கையை பிடித்து இழுத்தது குற்றமல்ல. கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், 2015ல் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்ட திருமணமாகாத மனநலம் பாதித்த ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக, பெண்ணின் தாய் சோழவந்தான் போலீசில் புகார் அளித்தார்.
முருகேசன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். அவருக்கு, 2018ல் மதுரை நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர், உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில், நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா பிறப்பித்த உத்தரவு:
ஒரு பெண்ணின் கைகளை, ஒரு ஆண் பிடித்து இழுப்பது என்பது அப்பெண்ணின் கண்ணியத்தை பாதிக்கும் செயலாகும். இருப்பினும் உள்நோக்கம் இன்றி கையை பிடித்து இழுப்பது பெண்ணை அவமதிப்பதாகாது; அது குற்றமும் இல்லை.
மேலும், மனுதாரர் கையை பிடித்து இழுத்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை. நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் உள்ளன.
மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. சந்தேகத்தின் பலனை மனுதாரருக்கு வழங்கி, அவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.