ஹொன்னாவரில் துறைமுகம் அமைக்க எதிர்ப்பு ; மீனவர்கள் மிரட்டல்; பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஹொன்னாவரில் துறைமுகம் அமைக்க எதிர்ப்பு ; மீனவர்கள் மிரட்டல்; பலத்த போலீஸ் பாதுகாப்பு
ADDED : பிப் 26, 2025 12:17 AM

கார்வார்; கார்வார் அருகே கேனி கிராமத்தில் துறைமுகம் அமைக்க, நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது போன்று, ஹொன்னாவர் அருகே காசர்கோடு டோங்கா கிராமத்திலும் துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள், கிராம மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
உத்தர கன்னடா மாவட்டம், கார்வார் அருகே கேனி கிராமம் உள்ளது. இங்கு உள்ள கடற்கரையில் துறைமுகம் அமைக்க, கர்நாடக அரசின் துறைமுக துறை முடிவு செய்து உள்ளது. இதற்கு மீனவர்கள், கிராம மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
போராட்டம்
துறைமுகம் அமைக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோகும் என்று கூறி, கேனி கிராமத்தை சேர்ந்த மக்கள், மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். மூன்று பெண்கள் கடலில் மூழ்கி தற்கொலைக்கும் முயன்றனர். அவர்களை போலீசார் மீட்டனர்.
கேனியை போன்று, ஹொன்னாவர் அருகே உள்ள காசர்கோடு டோங்கா கிராமத்திலும், துறைமுகம் அமைக்க மீனவர்கள், கிராம மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். ஆனாலும் நீதிமன்ற உத்தரவின்படி, துறைமுக துறை அதிகாரிகள் நேற்று நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கடலில் யாரும் இறங்கி விடக்கூடாது என்பதற்காக, நேற்று காலை முதலே உத்தர கன்னடா எஸ்.பி., நாராயண் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனாலும் ஒரே இடத்தில் கூடி மீனவர்கள், கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் சிலரை போலீசார் பிடித்து சென்றனர். 'அவர்களை விடுவிக்கா விட்டால் கடலில் குதித்து தற்கொலை செய்வோம்' என்று, கிராம மக்கள் மிரட்டல் விடுத்தனர்.
ரயில் பாதை
இதுகுறித்து எஸ்.பி., நாராயண் அளித்த பேட்டி:
காசர்கோடு டோங்காவில் 'ஹொன்னாவர் போர்ட் லிமிடெட்' என்ற நிறுவனம், வணிக நோக்கத்திற்கு துறைமுகம் அமைக்க, கடந்த 14 ஆண்டுக்கு முன்பே மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். பல ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், துறைமுகம் கட்ட சமீபத்தில் நீதிமன்றம், பசுமை தீர்ப்பாய அனுமதி கிடைத்துள்ளது.
இதனால் இன்று (நேற்று) நிலத்தை அளவீடு செய்ய, துறைமுக துறை அதிகாரிகள் வந்து உள்ளனர். ஆனால் துறைமுகம் அமைத்தால், தங்கள் வீடு, வாழ்வாதாரம் பறிபோகும் என்று, மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்த பிரச்னை குறித்து விவாதிக்க, மாவட்ட பொறுப்பு அமைச்சரும், துறைமுக அமைச்சருமான மங்கள் வைத்யா அதிகாரிகளுடன், ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
காசர்கோடு டோங்கா கிராமம் வழியாக, ரயில் பாதை அமைய இருந்தது. ஆனால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அமைச்சர் மங்கள் வைத்யா தடுத்து நிறுத்தினார். ஆனால் துறைமுகம் அமைந்தால் எந்த பிரச்னையும் இல்லை. மீனவர்களுக்கு எந்த தொந்தரவும் தர மாட்டோம் என்று, துறைமுக நிர்வாகம் கூறி உள்ளது. ஆனால் சிலர் வேண்டும் என்றே துாண்டிவிடுகின்றனர். அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.