மதுரா கிருஷ்ணர் கோவில் வழக்கு விசாரணைக்கு அனுமதித்து உத்தரவு
மதுரா கிருஷ்ணர் கோவில் வழக்கு விசாரணைக்கு அனுமதித்து உத்தரவு
ADDED : ஆக 02, 2024 12:24 AM

பிரயாக்ராஜ்: ஹிந்துக்களால் கிருஷ்ண ஜென்ம பூமி என அழைக்கப்படும் உத்தர பிரதேசத்தில் உள்ள மதுராவில், கேசவதேவ் எனும் கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது.
அதன் அருகிலேயே முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட ஷாஹி இத்கா என்னும் மசூதி உள்ளது. கடந்த 2020ல் மதுரா கிருஷ்ணர் கோவில் மீது உரிமை கோரி, மதுரா சிவில் நீதிமன்றத்தில் ஹிந்து அமைப்பினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், 'கி.பி., 17-ம் நுாற்றாண்டில் அவுரங்கசீப் உத்தரவின்படி, அவரது படையினர் மதுராவில் இருந்த பழைய கிருஷ்ணர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு, ஷாஹி இத்கா மசூதியைக் கட்டினர்.
'கிருஷ்ணர் கோவிலுக்குச் சொந்தமான அந்த இடத்தில் உள்ள மசூதி ஆக்கிரமிப்புகளை இடித்துவிட்டு, அதை கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்' என கோரப்பட்டது.
இதேபோல், மசூதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகளையும் ஒருங்கிணைத்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை; அவற்றுக்கும் தடை விதிக்க வேண்டும் என கோரி, மசூதி மேலாண்மை குழு மற்றும் உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இது குறித்து ஹிந்து அமைப்பினரின் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில், “இந்த, 18 வழக்குகளும் விசாரணைக்கு உகந்தவையே. எனவே, மசூதி குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
''இது தொடர்பான 18 வழக்குகளையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கும்,” என்றார்.