ADDED : மே 22, 2024 12:55 AM
புதுடில்லி, உத்தரகண்ட் மாநிலத்தின் ரூர்கியை சேர்ந்தவர் பார்த்தசாரதி முகர்ஜி. கடந்த 2015ல், இவரது எஸ்.பி.ஐ., வங்கிக் கணக்கில் இருந்து டில்லியில் உள்ள இரண்டு ஏ.டி.எம்., வாயிலாக 80,000 ரூபாய் பணம் எடுக்கப்பட்டது.
பார்த்தசாரதி அந்த பணத்தை எடுக்காத நிலையில், இது தொடர்பாக வங்கியில் புகார் அளித்தார். இ - மெயில் வாயிலாகவும் புகாரை பதிவு செய்துஉள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தியது. ஏ.டி.எம்., கண்காணிப்பு கேமரா காட்சிகளை எஸ்.பி.ஐ., வங்கி போலீசிடம் தாக்கல் செய்யவில்லை. எனவே, விசாரணை அரைகுறையாக உள்ளது.
இதையடுத்து, உத்தரகண்ட் நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷனை பார்த்தசாரதி நாடினார்.
ஏ.டி.எம்., மைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை வங்கி சமர்ப்பிக்காததை காரணம் காட்டி, பார்த்தசாரதி இழந்த 80,000 ரூபாய் பணத்தை திருப்பி தரும்படி வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.

