அரசு வேலையில் திருநங்கையருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய உத்தரவு
அரசு வேலையில் திருநங்கையருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய உத்தரவு
ADDED : ஜூன் 16, 2024 11:40 PM

கோல்கட்டா: பொது வேலை வாய்ப்பில் திருநங்கையருக்கு 1 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும்படி, மேற்கு வங்க அரசுக்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
கலந்தாய்வு
இங்கு, 2014 மற்றும் 2022ல் நடந்த 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை ஒருவர், அது தொடர்பான கலந்தாய்வு மற்றும் நேர்க்காணலுக்கு தன்னை அழைக்கவில்லை எனக் கூறி கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
திருநங்கையர், திருநம்பியர் ஆகியோரை மூன்றாம் பாலினமாக கருத வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது.
சமுதாயத்தில் பின்தங்கிய அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத் துறை, திருநங்கையருக்கு வேலைவாய்ப்பில் எந்தவித பாகுபாடும் இன்றி சமவாய்ப்பு வழங்கப்படும் என கடந்த 2022ல் தெரிவித்துள்ளது.
இதன் வாயிலாக திருநங்கையரை வேலைவாய்ப்பில் சமமாக நடத்தும் கொள்கையை மாநிலமே ஏற்றுக் கொண்டது, இந்த அறிவிப்பின் வாயிலாக தெளிவாகிறது.
நேர்காணல்
இருப்பினும், மாநிலத்தில் திருநங்கையருக்கான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படாமல் உள்ளது. அவர்களுக்கு பொது வேலைவாய்ப்பில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
மனுதாரருக்கு நேர்காணல் மற்றும் கவுன்சிலிங் நடத்த, மேற்கு வங்க தொடக்க கல்வி வாரிய செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.