அதிகளவு ரொக்க பரிமாற்றம் கண்காணிக்கும்படி உத்தரவு
அதிகளவு ரொக்க பரிமாற்றம் கண்காணிக்கும்படி உத்தரவு
ADDED : ஆக 18, 2024 12:04 AM

புதுடில்லி: ஹோட்டல்கள், மருத்துவமனைகள், செயற்கை கருவூட்டல் மையங்கள் போன்றவற்றில் அதிகளவில் ரொக்கப் பரிமாற்றங்கள் நடக்கின்றன. இவை தொடர்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி, வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மறைமுக வரிகள் தொடர்பான கொள்கைகளை வகுக்கும், சி.பி.டி.டி., எனப்படும் மறைமுக வரிக்கான மத்திய வாரியம், வருமான வரித்துறைக்கு சமீபத்தில் சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. நடப்பு நிதியாண்டில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ற பெயரில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ரொக்கமாக 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிமாற்றம் நடந்தால், அது குறித்து வங்கிகள் உள்ளிட்ட நிதி அமைப்புகள் தகவல்கள் தெரிவிக்க வேண்டும். ஆனால், இது முறையாக பின்பற்றப்படுவதில்லை என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
அதுபோல, 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண் குறிப்பிடாமல் அதிகளவு தொகைக்கான பரிவர்த்தனைகள் நடத்தக்கூடாது என்று விதிகள் கூறுகின்றன; இதுவும் முறையாக பின்பற்றப்படுவதில்லை.
குறிப்பாக ஹோட்டல்கள், விழா நடத்தும் அரங்குகள், மருத்துவமனைகள், செயற்கை கருவூட்டல் மையங்கள், என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லுாரி சேர்க்கை போன்றவற்றில் அதிக தொகைக்கான ரொக்கப் பரிவர்த்தனை நடப்பது தெரிய வந்துள்ளது.
இவை தொடர்பாக, தொந்தரவுகள் கொடுக்காத வகையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனைகளில், 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள வரி ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றில், 1,700 கோடி ரூபாய் மதிப்புள்ள வரி ஏய்ப்புகள், ரொக்கப் பரிவர்த்தனை வாயிலாக நடந்துள்ளன. அதனால், இவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

