ADDED : ஆக 25, 2024 10:31 PM
பெங்களூரு:
சிரூர் நிலச்சரிவுக்கு பின் விழித்துக்கொண்ட கர்நாடக அரசு, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகளை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளது.
குடகு மாவட்டத்தின், சிரூர் கிராமத்தில் கன மழை பெய்ததில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மண்ணுக்கடியில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதில் எட்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
சில ஆண்டுக்கு முன்பும், நிலச்சரிவால் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆண்டு தோறும் மழைக்காலத்தில், நிலச்சரிவு அசம்பாவிதங்கள் நடக்கின்றன.
இது குறித்து, ஆய்வு செய்துள்ள புவியியல் விஞ்ஞானிகள், 'இயற்கையாக உருவான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், மலைகள், குன்றுகளை வெட்டி சமன்படுத்தி, ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. காபி தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
'வேரில் இருந்து கெட்டியாக, மண்ணை பிடித்துள்ள மரங்களை வெட்டுவதாலும், விவேகமின்றி மலைகளை குடைந்து சாலை அமைப்பதாலும், நிலச்சரிவு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன' என அறிக்கை அளித்துள்ளனர்.
விஞ்ஞானிகளின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட மாநில அரசு குடகு, சிக்கமகளூரு, உத்தரகன்னடா, தட்சிணகன்னடா, உடுப்பி, ஷிவமொகா, ஹாசன், சாம்ராஜ்நகர் உட்பட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், 2015க்கு பின் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகள், தோட்டங்களை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

