உடல் உறுப்பு தானம் செய்வோர் சுதந்திர தின விழாவில் கவுரவிப்பு
உடல் உறுப்பு தானம் செய்வோர் சுதந்திர தின விழாவில் கவுரவிப்பு
ADDED : ஆக 08, 2024 05:56 AM

பெங்களூரு: உடல் உறுப்புகள் தானம் செய்வதாக அறிவித்துள்ள 80 பேரை, சுதந்திர தின விழாவில் முதல்வர் சித்தராமையா கவுரவிக்க உள்ளார்.
ஆண்டுதோறும் சுதந்திர தின விழா, பெங்களூரு மானக் ஷா பரேட் மைதானத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். வரும் 15ம் தேதி, சுதந்திர தின விழாவை விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், உயர் அதிகாரிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்பு ஒத்திகை பார்க்க வேண்டும். இதில், பங்கேற்கும் அனைவருக்கும், சிற்றுண்டி, குடிநீர் வசதி செய்ய வேண்டும்.
மானக் ஷா பரேட் மைதானத்தில், யார், யாருக்கு எந்த நுழைவு வாயிலில் அனுமதி அளிக்க வேண்டும் என்பது குறித்தும்; வாகனங்கள் நிறுத்துவது குறித்து விபரமாக தெரியப்படுத்த வேண்டும்.
ஏற்பாடுகளில் எந்தவிதமான குளறுபடியும் நடக்கவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடத்தப்பட வேண்டும். மைதானத்தை சுற்றி தடுப்புகள் போட வேண்டும். மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும்.
விழாவில், உடல் உறுப்புகள் தானம் செய்வதாக அறிவித்துள்ள 80 பேரை, முதல்வர் சித்தராமையா கவுரவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்குவார். இதற்கான ஏற்பாட்டை அதிகாரிகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.