5,000 பண மோசடி வழக்குகளில்,40 பேருக்கு மட்டும் தண்டனை அமலாக்கத் துறைக்கு கோர்ட் குட்டு
5,000 பண மோசடி வழக்குகளில்,40 பேருக்கு மட்டும் தண்டனை அமலாக்கத் துறைக்கு கோர்ட் குட்டு
ADDED : ஆக 08, 2024 01:24 AM
புதுடில்லி, பண மோசடி தொடர்பாக, 5,00-0க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை, 40 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். யாரோ ஒருவர் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரிக்காமல், விஞ்ஞானப்பூர்வமாக விசாரிக்க வேண்டும் என, அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி கையாள்வதில் சட்டவிரோதமாக வரி வசூலித்ததாக, தொழிலதிபர் சுனில் குமார் அகர்வால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த, மே மாதம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நிரந்தர ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புய்யான், திபாங்கர்தத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய தீவிர குற்றச்சாட்டுகள் பல உள்ளன. ஆனால், ஒரு சில தனிநபர்கள் அளித்த வாக்குமூலங்கள் அடிப்படையில், அமலாக்கத் துறை வழக்குகளை விசாரித்து, கைது செய்து வருகிறது.
இதுவரை, 5,-0-00க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 40 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இருந்து உங்களுடைய விசாரணை நடைமுறை குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். இன்று வாக்குமூலம் அளித்தவர், நாளை மாற்றி சொல்ல மாட்டார் என்பதில் என்ன உறுதி உள்ளது.
விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நாங்கள் கைது செய்வோம், குற்றம் செய்யவில்லை என்பதை, கைது செய்யப்பட்டவர் நிரூபிக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்.
போதிய மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும் என்று பண மோசடி தடுப்புச் சட்டப் பிரிவுகள் கூறுகின்றன. ஆனால், கைது செய்துவிட்டு, ஆதாரங்களை தேடுவதாக தெரிகிறது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், நேற்று முன்தினம் லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
அதில், 2014ல் இருந்து, 5,200 வழக்குகளை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளதாகவும், அதில், 40 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.