மூன்று கி.மீ., துாரம் ரோட்டில் சென்ற படையப்பா யானை
மூன்று கி.மீ., துாரம் ரோட்டில் சென்ற படையப்பா யானை
ADDED : ஜூலை 29, 2024 12:27 AM

மூணாறு: மூணாறு டாப் ஸ்டேஷன் ரோட்டில் மாட்டுபட்டி எக்கோ பாய்ண்ட் முதல் புதுக்கடி வரை மூன்று கி.மீ., தூரம் ரோட்டில் படையப்பா சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். அந்த யானை கடந்த ஒரு மாதமாக மூணாறு அருகே மாட்டுபட்டி, அருவிக்காடு, குண்டளை, செண்டுவாரை ஆகிய பகுதிகளில் வலம் வந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் பகலில் அருவிக்காடு எஸ்டேட் பகுதியில் நடமாடிய படையப்பா மாலை 5:00 மணிக்கு மூணாறு, டாப் ஸ்டேஷன் ரோட்டில் முக்கிய சுற்றுலாப் பகுதியான மாட்டுபட்டி 'எக்கோ பாய்ண்ட்' பகுதியில் வனத்துறை சோதனை சாவடியை அடுத்து ரோட்டில் திடீரென வந்தது. அப்போது அங்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லாத நிலையில், அங்கிருந்து புதுக்கடி வரை மூன்று கி.மீ., தூரம் ரோட்டில் படையப்பா சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ரோட்டில் யானை வருவதை பார்த்த வாகன ஓட்டிகள் திரும்பிச் சென்றனர்.
சேதம்
நேற்று முன்தினம் இரவு குண்டளை எஸ்டேட் பகுதிக்குச் சென்ற படையப்பா, விவசாயி வேளாங்கண்ணியின் காரட் தோட்டத்தையும், விவசாயி தாஸ்ஸின் வாழை மரங்களையும் சேதப்படுத்தியது. நேற்று பகலிலும் படையப்பா முகாமிட்டதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.