ADDED : ஜூலை 31, 2024 02:15 AM

பாலக்காடு மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
நெம்மாரா என்ற பகுதியில் நேற்று காலை 6:00 மணிக்கு கனமழை பெய்தபோது வீடு இடிந்து விழுந்ததில், பழனியம்மாள், 78, என்ற பெண், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.
காயங்களுடன் தப்பிய அவரது மகள் பாப்பாத்தியை அப்பகுதி மக்கள் மீட்டு, நெம்மாரா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாலக்காடு நகரப் பகுதியான சேகரீபுரம், ஒலவக்கோடு, புத்துார், காவில்பாடு ஆகிய பகுதியில் உள்ள காலனிகளில் மழை வெள்ளம் புகுந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், போலீசார், ஊர் மக்களுடன் சேர்ந்து படகு வாயிலாக, அப்பகுதியில் சிக்கித் தவித்தவர்களை மீட்டு, நிவாரண முகாமுக்கு அனுப்பினர்.
ஆலத்துார் விழுமலை, தயறாடி மைலம்பாடி, மங்கலம் அணை ஒடம்தோடு, கடப்பாறை, வட்டப்பாறை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. பாதிப்படைந்த இப்பகுதியில் வசிக்கும் மக்கள், அருகிலுள்ள நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
பாலக்காடு மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மாவட்டத்திலுள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா தலங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.